காதல் விவகாரம்; சிறுவர்கள் இருவர் தற்கொலை

காதல் விவகாரம்; சிறுவர்கள் இருவர் தற்கொலை-2 Student Committed Suicided-Katugastota

பாலத்திற்கு அருகில் சென்றபோது, கண் எதிரே குதித்தனர் - தந்தை

கண்டி, கட்டுகஸ்தோட்டை, பொல்கொல்ல பகுதியில் மகாவலி கங்கைக்கு குறுக்கான பாலத்தின் கீழிருந்து 16 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் தற்கொலை செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த இருவரும் குறிப்பிட்ட காலமாக, காதலித்து வந்துள்ளதாகவும், அதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

அவர்கள் நேற்று (06) பிற்பகல் தங்களது வீடுகளிலிருந்து சென்றுள்ள நிலையில் வீடு திரும்பாததை அடுத்து, சிறுவனின் தந்தை இன்று (07) அதிகாலை 5.00 மணியளவில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கட்டுகஸ்தோட்டை, நவயாலதென்ன புகையிரத பாலத்தில் இரு பாடசாலை சிறுவர்கள் நிற்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவத்தை கேள்வியுற்ற தந்தை, அவ்விடத்திற்குச் சென்ற போது, சிறுவர்கள் இருவரும் பாலத்திலிருந்து கங்கைக்குள் பாய்ந்துள்ளனர்.

இதன்போது, அருகிலிருந்த தோணியைப் பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்களது சடலங்கள் இன்று (07) முற்பகல் 8.00 மணிக்கு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை, நவயாலதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதான சியாமளி ரத்நாயக்க எனும் மாணவியும், பல்லேதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த அகில விஜேரத்ன எனும் 16 வயது மாணவனுமே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரிவித்த குறித்த சிறுவனின் தந்தை, பாலத்தில் நடுவில் சிறுவர்கள் இருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் பாலத்தில் நிற்பதாக கேள்வியுற்றதைத் தொடர்ந்து, அங்கு சென்றபோது, மகனும் குறித்த சிறுமியும் பாலத்தின் நடுவில் நின்றிருந்தனர்.

பாலத்திற்கு அருகில் சென்ற நான் அவர்கள் இருவரும் பாலத்தின் நடுவில் நிற்பதைக் கண்டேன். ஆற்றில் மட்டும் பாய்ந்து விடாதீர்கள் எனக் கூறியவாறு நான் மெதுவாக அடியெடுத்துச் சென்றபோது, ஒரு மீற்றர் இடைவெளி இருக்கும் போது, மகன் அச்சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு ஆற்றில் குதித்து விட்டார். நான் உதவி கோரி கூக்குரலிட்டேன். பின்னர் தோணியை எடுத்துக் கொண்டு அங்கு சென்றபோது அவர்கள் இருவரையும் காண முடியவில்லை, எனத் தெரிவித்தார்.

நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333


Add new comment

Or log in with...