ஐ.நா வின் அறிக்கை: இறுதி முடிவு 24இற்கு பின்

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக்கை தொடர்பிலான இறுதி முடிவு, எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பின் எடுக்கப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
 
எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா அமர்வில் வெளியிடப்படுகின்ற இறுதி அறிக்கையினை அடிப்படையாக கொண்டே எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
 
குறித்த தினத்தில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் வெளியிடப்படுகின்ற அறிக்கையும் கவனத்திற் கொண்டதன் பின்பே இறுதி அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
 
இன்று (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார்.
 
தற்போது வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் எந்தவொரு நபரும் சுட்டிக் காட்டப்படாத நிலையில் யுத்த குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார். 
 
இறுதி யுத்தத்தின் போது இரு தரப்பிலும் குற்ங்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாவும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
 
எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் வெளியிடப்பட உள்ள இறுதி அறிக்கையில் பலமான உள்ளக விசாரணைக்கு அனுமதி வழங்கப்படும் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
இந்நிகழ்வு இன்று (17) அமைச்சரவையினால் நியமனம் பெற்ற, அமைச்சரவை பேச்சாளர்களான, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...