பிக் போஸ் 94 ஆம் நாள்: 11 இலட்சத்துடன் வெளியேறுங்கள்

Part 01


Part 02


Part 03


Part 04


Part 05

கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் வரும் பொண்ணுங்களே இப்படித்தான் பாடலுடன் ஆரம்பமானது, 94-வது நாள். பாடல் புரியாத கணேஷ், ஏதோ கிளாசிக்கல் பாடலுக்கு ஆடுவதுபோல ஆடிக்கொண்டிருந்தார். ஆரவ்வும் ஹரீஷும், பிரஷ் செய்துகொண்டே ஆடிக்கொண்டிருந்தனர். சிநேகன், தன் அக்மார்க் ராமராஜன் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் கலக்கலாக ஆடும் பிந்துமாதவி, இந்தப் பாடலுக்கு ஏனோ அமைதியாக இருந்தார். தான் நடித்த படத்தில் வரும் பாடல் என பிந்து மாதவி கண்டுபிடித்துவிட்டாரோ என்னவோ!

aarav

டாஸ்க் எதுவும் சொல்லப்படாததால், ஜாலியாக அமர்ந்து ஐவரும் காபி குடித்துக்கொண்டே கதை பேசிக்கொண்டிருந்தனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் பறவை ஒன்று, பிந்துவின் தலையில் சில்மிஷம் செய்துவிட்டதாய் ஹரீஷ் கிளப்ப, பிந்து Bullshit (எருமை சானம்) என புலம்பினார். இல்லைங்க, இது birdshit தான், Bullshit பெருசா இருக்கும் என்றார். அதைச் செய்தது காக்காதான் என உறுதியாகச் சொன்னார் ஆரவ். கக்கா எந்தப் பறவையோடதுனு கண்டுபிடிக்கிற நேரமா இது ஆரவ். இவ்வளவு களேபரங்கள் இங்கு நடந்து கொண்டிருக்க ஒண்ணும் தெரியாத கரகாட்டக்காரன் பட செந்தில் போல, அமைதியாய் அமர்ந்திருந்த பறவையை ஒன்றை காட்டிக்கொடுத்தது, பிக் பாஸ் கேமரா. ஆமா, பறவைகூட ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது. ஆனா, அந்தப் பறவை தான் தப்பே பண்ணலியே.(என்னமோ போங்க பிக் பாஸ்)

பிந்து மாதவி

***
12 மணிக்கு, நாளுக்குரிய முதல் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். வழக்கம்போல தெலுங்குப் பட டைட்டில்தான்' நிக்குறோம் தூக்குறோம்'. நீச்சல் குளத்தில் இரண்டு இரும்புக்கம்பிகள் இருக்கும். அதில் ஏறி நிற்க வேண்டும். எந்த அணி கடைசி வரை ஏறி நிற்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர். சிநேகன், ஆரவ் ஒரு அணியாகவும் ஹரீஷ், பிந்து ஒரு அணியாகவும் பிரித்துக்கொண்டனர். கணேஷ், இந்தப் போட்டிக்கு நடுவராக இருந்தார். 

முதலில் பிந்து மாதவியும் ஆரவ்வும், கம்பி மேல் நிற்க ஆரம்பித்தனர். இந்த வாரம் முழுக்கவே எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் தான் செல்கிறது. இந்தப் போட்டியைக்கூட மிகவும் ஜாலியாக விளையாட ஆரம்பித்தனர். ஆரவ்வும் பிந்து மாதவியும், கைகளைக் கோத்தபடி, 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனப் பாடிக்கொண்டே கம்பியைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தனர். சுவாரஸ்யமே இல்லாமல், டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்க, சிநேகன் மட்டும், "இந்த மாதிரி விளையாட்டா ஆரம்பிக்கிற டாஸ்க்தான் சீரியஸா முடியும் "நீங்க வேணும்னா பாருங்களேன் எனப் பார்வையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்படி ஏதோ சொல்லிக்கொண்டி  ருந்தார். ஹரீஷ் ஒரு பக்கம், இந்த மாதிரி டாஸ்க்குக்கெல்லாம் கவிஞர்தான் லாயக்கு. அவர் பாட்டுக்கு நிப்பார் என்றார். 'பாட்டுக்கு' நிற்பவர்தானே கவிஞர். ஆனால், அந்த கார் டாஸ்க்கில் சுஜாவும் சிநேகனும் அப்படித்தான் நடந்துகொண்டனர். சந்தானம், 'வாலு' பட காமெடி ஒன்றில் இரவு முழுக்க நின்று ஒரு நாளை கடப்பார். அதை மீறி கார் டாஸ்க் செய்தனர் சுஜாவும் சிநேகனும். 

பிந்து மாதவி, ஆரவ்

டாஸ்க் ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஆகியும் ஒன்றுமே நடக்காமல் இருக்க, 'இது ஆவறதில்ல' என கடுப்பான பிக் பாஸ், இருவரையும் ஒரு கால், ஒரு கை கம்பியில் படக்கூடாது என கட்டளையிட்டார். அதற்குரிய பலன் சீக்கிரமே கிடைத்தது. ஆரவ் முதலில் அவுட்டாக, பிறகு பிந்துவும் அவுட்டானார். பின்பு ஹரீஷும், சிநேகனும் போட்டியில் பங்குபெற்றனர். வழக்கம்போல, ஹரீஷ் சொதப்ப, போட்டியில் சிநேகன் வெற்றிபெற்றார். 

வெற்றிபெற்ற அணிக்கு பாயின்ட்டுக்கு பதிலாக  30,000 ரூபாய்க்கான கிஃப்ட் வவுச்சர் gift voucher வழங்கினார் பிக் பாஸ். ஆரவ்வும் சிநேகனும், 100 நாள் உழைச்சிருக்கோம், இந்த விவோ மொபைலையாவது ஒண்ணு கொடுக்கலாம்ல, என கேமராவில் புலம்பியதற்கு, வவுச்சர் கிடைத்திருக்கிறது போல. அட, இது நம்ம எல்லோருக்குமான வெற்றி என துணிக்கடை வவுச்சருடன் போஸ் கொடுக்க அனைவரையும் அழைத்தார். போற போக்கைப் பார்த்தா, பிக்பாஸ் செட்டைப் பிரித்தால்கூட, சிநேகன் வெளியே வரமாட்டார் போல. 

பிக் பாஸ் தமிழ்

****
மாலை 5 மணிக்கு அடுத்த டாஸ்க் ஆரம்பமானது. டாஸ்க்கின் பெயர் டிக் டேக் டோ. பள்ளிக்கூடங்களில், போர் அடிக்கும் வகுப்பில் பேப்பரில் கட்டம் போட்டு விளையாடுவோமே , அதே விளையாட்டுதான். 9 கட்டங்கள் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் யார் முதலில் கோணலாகவோ, நேராகவோ ஒரு வரிசையை கம்ப்ளீட் செய்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். இதே போட்டி, தரையில் நடந்தது. இரு அணிகளுக்கும் மூன்று துண்டுகள் கொடுக்கப்பட்டன.  எந்த அணி முதலில் ஒரு வரிசையை முடிக்கிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்கள். சிநேகன், கணேஷ் ஒரு அணியாகவும், பிந்து, ஹரீஷ் ஒரு அணியாகவும் பிரிந்தனர். இந்த முறை ஆரவ் நடுவராக செயல்பட்டார். 

முதல்முறை பிந்து மாதவி வென்றுவிட, அடுத்த மூன்று முறையும் சிநேகன், கணேஷ் அணி வென்றுவிட்டது. "எனக்கு இந்த கேமோட, டெக்னிக் கொஞ்ச நேரம் கழிச்சுதான் தெரிஞ்சது நண்பா" என்றார் கணேஷ். இவர் மட்டும் தனியாகச் சென்று 'விவேகம்' படம் பார்த்துவிட்டு வந்திருப்பாரோ என்னவோ, விவேக் ஓபராயைவிட அதிகமாக 'நண்பா' போட்டுக்கொண்டிருந்தார். போதும் நண்பா முடியல. மறுபக்கம், ஆரவ் விளையாட்டை விளக்கிக்கொண்டிருந்தார். டீ முடிஞ்சு போச்சு ஆரவ்..

பிந்து மாதவி

***
மாலை 6 மணிக்கு பிக்பாஸ் கன்ஃபெஷன் ரூமுக்குள் பிந்து மாதவியை அழைத்து, 'இந்த சூட்கேஸில் 10 லட்ச ரூபாய் இருக்கு என்றார். இப்போதே விலகிக்கொள்பவர்கள் , இந்த 10 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியேறலாம்' என அறிவித்தார் பிக் பாஸ்.அதேபோல, இந்த 10 லட்ச ரூபாய் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையிலிருந்து கழிக்கப்படும் என்றார். (இதென்ன நியாயம் பிக் பாஸ்). பழைய படங்களில் காதலைப் பிரிக்கும் பணக்கார அப்பா, ஒரு சூட்கேஸில் பணம் தருவாரே, அதே டெம்ப்ளேட். ஒட்டுமொத்த அணியும் எங்கள் காதல் உண்மைக் காதல் என 10 லட்சத்தை வாங்க மறுத்தது. நாங்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு வரவில்லை என்றும், மக்கள் விருப்பப்பட்டால் செல்கிறேன் என்றும் அறிவித்தார்கள். "இப்போதானே டிரெஸ் எல்லாம் ... " என ஹரீஷ் எதையோ சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் பிக் பாஸ் பேசத்தொடங்கி, ஹரீஷை வாயடைத்தார். (நல்லா எடிட் பண்ணுங்கப்பா ).

யோசிச்சு முடிவு பண்ணுங்க, 'போனா வராது, பொழுது போனா கிடைக்காது' என பிக் பாஸ் எவ்வளவோ வார்த்தை ஜாலங்கள் காட்டியும் யாரும் அதை எடுக்கவில்லை. இனி பாருங்க,  விலை ஏறும் என கணித்தார் ஆரவ். 30 லட்ச ரூபாய் வரை இந்த டீலிங் போகும் பாருங்களேன் என்றார் ஆரவ். அப்படியே, 50 லட்சம் வரை போனா, எடுத்துட்டுப் போயிடலாம்னு ஆரவ் பிளான் பண்ணினார் போல. 
இதற்கு நடுவே கணேஷை கலாய்க்க, சிநேகனும் ஹரிஷும் திட்டம் போட்டனர். தங்களுக்குள் சண்டை போட்டால், ' என்ன ஆச்சு நண்பா' என கணேஷ் வருவார் என்பது சிநேகனின் எண்ணம். என்னடா இது ஜென்டில்மேன் கணேஷுக்கு வந்த சோதனை. சரி, ஜென்டில்மேன் என்றாலே ஏமாளிகள்தானே! இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட, கணேஷ் எதிர்பார்த்தபடி "என்ன ஆச்சு நண்பா" என்றார். ஆனால், ஹரக்‌ஷின் திருட்டு விழியில், நடிப்பதைக் கண்டுபிடித்துவிட்டார் கணேஷ். அப்போதும் அதே சிரிப்புதான். எப்பதான் பாஸ் உங்களுக்கு கோபம் வரும். 

மீண்டும் 7.30 மணிக்கு பெட்டி வந்தது. 15, 20 லட்சம்னு கூட்டுவார்னு பார்த்தா, பிக்பாஸ் ஒன்றாம் வாய்ப்பாடு போல ஒரு எண்ணைக் கூட்டி, ''11 லட்சம் இருக்கு, யாரு போறீங்க'' என்றார். இப்போதும் முடியாது, முடியாது என கூலாக அறிவித்தது ஐவர் கூட்டணி. எப்படி ஒற்றுமையா இருக்கணும்னு, தமிழக அரசியலின் மூவர் கூட்டணிக்கு (இப்போ ரெண்டு) கிளாஸ் எடுக்கலாம் இந்த ஐவர் கூட்டணி.

பிந்து மாதவி

***

இரவு எட்டு மணிக்கு புதிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்து, வந்த டாஸ்க்குகளில் எவையெல்லாம் சிறப்பாக இருந்ததோ, அந்த டாஸ்க்குகள் இந்த வாரம் முழுக்க வருமாம். அப்ப, புதுசா எதுவும் யோசிக்கல. அப்படித்தான... 

பிக் பாஸில் ஹிட் அடித்த 'திருடா.. திருடா' டாஸ்க்கை மீண்டும் விளையாட பணித்தார் பிக் பாஸ். ஐவர் மட்டுமே இருப்பதால், உறுப்பினர்களுக்கு பெயர் என எதுவும் வழங்காமல், வைரப்பெட்டி மட்டும் எடுத்துவந்து வைக்கப்பட்டது. ஹரீஷை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து, ''இந்தமுறை நீங்கள்தான் திருடனாக இருக்க வேண்டும்'' என்றார் பிக் பாஸ். நம்ம பிஞ்சு மூஞ்சிக்கு அதெல்லாம் செட் ஆகாது என்பது போல பார்த்தார் ஹரீஷ். அறையைவிட்டு வெளியே செல்லும்போது, ''இந்த சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு போங்க ஹரீஷ்'' என்றார் பிக் பாஸ். கேஷுவலா இருக்காங்களாம். கணேஷை அழைத்து, "திருடனைப் பிடிக்க என்ன திட்டம் வச்சி  ருக்கீங்க" என்றார் பிக் பாஸ். "நாங்க அலெர்ட்டா இருப்போம் பிக் பாஸ்" என்றார் கணேஷ். உங்க அலெர்ட் லட்சணங்களைத்தான் நாங்க போன தடவை பார்த்தோமேடா. 

சிநேகன்

" நான் வேணும்னா, போன தடவை மாதிரி தூங்கிட்டா வைரத்தை ஈசியா எடுத்துடலாம்ல" என நக்கலடித்தார் ஆரவ். ஆம், சென்ற முறை இந்த விளையாட்டு வந்தபோது அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு மிகப்பெரிய பாரம்பர்ய கூட்டுக் குடும்பம். காயத்ரி , நமீதா என இரு மருமகள்கள். கண்டிப்பான மாமனார். கடைக்குட்டி ஜூலி. வேலையாள் சிநேகன். விருந்தாளி ஓவியா என அதுவொரு கலக்கல் டீம். " இதான் உங்க அண்ணியா, பன்னி மாதிரி இருக்கு" என ஓவியா கேட்டதெல்லாம் ஓவியா ஆர்மியினருக்குக் கண் முன்னால் வந்து போயிருக்கும் (எனக்கும் வந்து போச்சு பாஸ்).

இரவு, ஓவியா வைரத்தை ஜாலியாக எடுக்க முயற்சித்தது. சக்தி, ஆரவ் தூங்கியதும், அதை மாற்றிவிட்டு கமுக்கமாகத் தூங்கியது. இரண்டு நாட்கள் கழித்து, " இதுக்கு மேல முடியாது குருநாதா" என சக்தி அப்ரூவராக மாறியது  என கிரைம் த்ரில்லர் ரேஞ்சில் நிகழ்ந்த நிகழ்வு அது.   

ஆனால், இப்போது இருப்பது ஐவர் மட்டும்தான். இதில் எப்படி நடத்த முடியும் என்பது போல ஆரம்பிக்கப்பட்டது  'திருடா திருடா'  டாஸ்க்.  
அங்கு இருக்கும் அணியினரை நக்கல் அடித்தபடியே இருந்தார் ஆரவ். அந்தத் திருடன் ஓவர் கோட் போட்டிருக்கலாம் (பிந்து),  குடுமி வச்சு இருக்கலாம் (சிநேகன்), கண்ணாடி போட்டிருக்கலாம் (ஹரீஷ் ),தமிழ் பேசத் தெரியாத மாதிரி நடிக்கலாம் (பிந்து மாதவி) என ,தெறி, பட இன்டர்வெல் விஜய் போல பஞ்ச் பேசிக்கொண்டிருந்தார். கணேஷ் சும்மாவே ஓவர் ஆக்டிங் பண்ணுவார். அவரெல்லாம் இதுக்கு செட்டாக மாட்டார் எனப் போகிறபோக்கில் ஜென்டில்மேன் கணேஷையும் நக்கல் அடித்தார்.

"எனக்கென்னமோ, உன் மேலதான் டவுட்டா இருக்கு" என கோலை ஆரவ் பக்கம் திருப்பினார் பிந்துமாதவி. "உண்மைலயே நான் திருந்திட்டேன், நான் கொலைகாரன் இல்லை" என கொலைகாரன் டாஸ்க்கை நினைவுபடுத்தினார் ஆரவ், இப்போது பிந்துமாதவி, எனக்கென்னமோ சிநேகன் மேலதான் சந்தேகமா இருக்கு" என்றார். ''பெத்த தாயி பிள்ளையைப் பார்த்து சந்தேகப்படலாமா'' என்றார் சிநேகன். ஏனோ, இன்று நாள் முழுவதும் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககரா போல, முகத்தில் பவுடர் பூசிய நிலையில் இருந்தார் சிநேகன். (ஃபைனலுக்கு ரெடியாகுறார் போல)."எனக்கு இப்ப ஹரீஷ் மேலதான் சந்தேகம்"  என்றார் பிந்துமாதவி. அடப்போம்மா, நீயி பிக் பாஸைத் தவிர எல்லார் மேலயும் சந்தேகப்படுற. 'ஹரீஷ், நெசமா நான் இல்லைங்க' என்பது போல பிந்துவைப் பார்த்தார். பிந்து மாதவி , ''சத்தியமா நீ இல்லையா? சத்தியமா'' என மீண்டும் மீண்டும் கேட்டார். இம்புட்டு பச்ச மண்ணா இருக்கே, விட்டா ஸ்கூல் பொண்ணு மாதிரி அடுத்து மதர் ப்ராமிஸ், ஸ்டடி ப்ராமிஸ் எல்லாம் கேட்பார் போல. ஆனாலும், பிந்து மாதவி ப்ராமிஸ் கேட்ட விதம், அவ்வளவு அழகு.

பிந்து மாதவி

போன தடவை கொடுத்தது போல, டூப்ளிகேட் வைரம் எதுவும் கொடுக்காமல் இருக்கலாம் என ஆரவ் தனக்குத்தானே ஏதேதோ சொல்லிக் கொண்டார். ஆரவ் மட்டும் வாஷ் பேசின் மேல் இருக்கும் இடத்தில் எல்லாம் சென்று டூப்ளிகேட் வைரம் இருக்கிறதா எனப் பார்த்தார். பழைய போட்டியாளர்கள், நினைவுகள் என அதிகம் பகிர்வது ஆரவ்தான்.  சிநேகன், கணேஷ் எல்லாம் அடுத்த கட்டத்துக்கு விரைவில் வந்துவிடுகிறார்கள். சிநேகன் கூர்கா போல, குச்சி, விசிலுடன் களம் இறங்கினார். ரோந்துப் பணியில் ஈடுபடுவார் போல. 
கதாநாயகன், 'பலூன்' பட ப்ரொமோஷன்களுக்குப் பிறகு, தன்னை அறியாமல் இந்த வாரம் வெளியாக இருக்கும் 'ஹர ஹர மகாதேவகி' திரைப்படத்துக்கு விளம்பரம் வைத்துக்கொண்டிருந்தார் ஆரவ். வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் வைரலாகி, திரைப்படங்கள் வரை ஹிட் அடித்த வரலாறு, 'ஹர ஹர மகாதேவகி'க்கு உண்டு. அதில் வரும் ராஜா கரடி கதையை பிக் பாஸுக்கு ஏற்றவாறு சொன்னார் ஆரவ். அந்த ராஜா பேரு பிக் பாஸாம் எனப் போகிற போக்கில் பிக் பாஸைக் கொட்டினார் ஹரீஷ். எந்தவித விறுவிறுப்பும் இல்லாமல் சென்ற நாளை, சுவாரஸ்யமாக்க, தன்னால் இயன்றவரை பாடுபட்டார் ஆரவ். பிக் பாஸ், அவருக்குக் கொஞ்சம் பேட்டாவுல பார்த்து போட்டுக்கொடுங்க பிக் பாஸ்.

ஆரவ்

"ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா பாக்குறவங்கள எல்லாம் அடிக்கச் சொன்னாராம். அந்த ராஜா, ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போனாராம். ஒரு கரடியைப் பார்த்தாராம். அம்பு எடுத்து விட்டாராம். ஜஸ்ட்டு மிஸ்ஸு. கரடி மேல படல. அடுத்து, ஒரு கம்ப எடுத்து விட்டாராம் அவரு மேல, அதுவும் ஜஸ்ட்டு மிஸ்ஸு. அந்தக் கரடி எஸ்கேப் ஆயிடுச்சு. பதிலுக்கு அந்தக் கரடி, இந்த ராஜாவைப் பார்த்து சொல்லுச்சாம். இந்த வில்லையே உனக்கு விடத்தெரியலயே, நீ எப்படி இந்த வைரத்த திருடப்போற? அதுக்கு அந்த ராஜா, "பாருடா, இந்தவாட்டி நன்னா திருடுவேன்னு சொன்னாராம். "முதல்முறையாக ஹர ஹர மாகதேவகி ஜோக் கேட்கிறார் போல பிந்து மாதவி விழுந்து விழுந்து சிரித்தார். வெளியே சென்றதும் கண்டிப்பா அசிஸ்டென்டிடம் சொல்லி, மற்ற ஜோக்குகளையும் கேட்டுத் தெரிந்துகொள்வார் என நம்பலாம். பிந்துவுக்கு உண்மையிலேயே தமிழ் தெரியாதுதான் போல. அம்புல இருந்து எடுத்து எப்படி வில்ல விட முடியும் என கடைசி வரை அவர் கேட்கவில்லை. சரி, எல்லாம் தெரிஞ்ச கவிஞர் சிநேகனே, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியது தாயுமானவர்னு நம்பும்போது, சுந்தரத் தெலுகு பிந்து மாதவியை எல்லாம் குற்றம் சொல்வது தவறு. நீ சிரி தாயி.
'தேவதைகளும் பிசாசுகளும்' டாஸ்க்கிற்குப் பிறகு, ஒட்டுமொத்த அணியும் உஷாராகிவிட்டது. மெனக்கெட்டு விழித்திருந்து டாஸ்க் செய்கிறார்களோ இல்லையோ. அங்கேயே பாயப் போட்டு படுத்துவிட்டார்கள். தேவதைகள் டாஸ்க்கின்போது, இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார் ஆரவ். ஆனால், இந்த முறை அணி மாறிவிட்டதால், யாரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என கவுண்டமணி சொன்னதுதான் எவ்வளவு தீர்க்கதரிசனம். ஐவரும், தங்கள் பெட்டை எடுத்துவந்து வைரப்பெட்டிக்குப் பக்கத்தில் படுத்துக்கொண்டனர். 

சிநேகன்

இரவு 12 மணிக்கு ஒட்டுமொத்த அணியும் தூங்கிவிட்டது. ஹரீஷ் எழுவார் என்று பார்த்தால், ஆரவ் எழுந்து வந்தது  சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு, இவனுகள நம்பி டாஸ்க் வேற தர்றியே பிக் பாஸ் என்பது போல, கேமராவில் சைகை காட்டிவிட்டு தூங்கச்சென்றுவிட்டார். 4 மணிக்கு எழுந்த ஹரீஷ், மிகவும் சாமர்த்தியமாக  வைரத்தை எடுத்துக்கொண்டு வந்து படுத்துவிட்டார். 

5 மணிக்கு பீப் ஒலி அலற, அனைவரும் எழுந்து பார்த்தால், வைரம் மிஸ்ஸிங். ஆரவ், ''எனக்கு  சிநேகன், ஹரீஷ் மேலதான்  சந்தேகம்'' என கணேஷிடம் சொல்லிக்கொன்டிருந்தார். ஏன்னா, கவிஞர் செம்ம தூக்கம் தூங்கினார் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பார்வையாளர்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. சென்ற முறையாவது ஒட்டுமொத்த அணியும் உள்ளே தூங்கியது. காவல் காத்தது ஆரவ், சக்தி மட்டும்தான். அதில் ஆரவ், கண் அசர, சிநேகன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினார். ஆனால் இந்த முறை, ஒட்டுமொத்த அணியும் அங்கேயேதானே படுத்து இருந்தார்கள். பிறகெப்படி இது சாத்தியம்!

ஹரிஷ்

'போட்டி' என்று வந்துவிட்டால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடும் சிநேகன் எப்படித் தூங்கினார். பிக் பாஸ், சிநேகனை அழைத்து, 'நீங்கள் தூங்க வேண்டும்' என கட்டளையிட்டு இருந்தாலே ஒழிய இது சாத்தியமில்லை என்றே தோன்றியது. எல்லாம் பிக் பாஸுக்கே வெளிச்சம்.
இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், இந்த பிக் பாஸ் டீமை விட்டு, நாளை ஒருவர் வெளியேறப்போகிறார் என்ற பிக் பாஸின் அறிவிப்புடன், விளக்குகள் அணைக்கப்பட்டன. 

கமலின் அரசியல் ட்விட்டரைக் கடந்து, ஒரே நாளில் பல மீடியாக்களுக்கு பேட்டி தரும் அளவுக்கு talk of the town ஆகியிருக்கிறது. சமூக வலைதளங்களில், 'முதல்வர்' கமலுக்கு ஆதரவும் அறிவுரையுமாகக்  கொட்டுகிறது. சூழ்நிலை இப்படியிருக்க, கமல் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் எந்தவித சண்டையோ, முகச் சுளிப்புகளோ, மனித உரிமை மீறலோ  நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில், பிக் பாஸ் அணி கவனம் செலுத்துகிறதோ எனவும் எண்ணத்  தோன்றுகிறது,  தீவிர அரசியல் என வந்துவிட்டால், சினிமாவுக்கு குட்பை என ஒரு பேட்டியில் சொன்னார் கமல். சினிமாவுக்கே குட்பை என்றால், பிக்பாஸ் எம்மாத்திரம்?!  முதல் சீசனை முடித்து கமலை அனுப்பிவிட்டு, இரண்டாவது சீசனை ரணகளமாக  நடத்தக் காத்திருக்கிறார்கள் போலும். இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, கடைசி நான்கு நாட்களிலேனும்  ஏதேனும் சுவாரஸ்ய  சிக்ஸர் அடிப்பார்களா... அல்லது  கிழிந்த துணியை தைப்பது, அழுக்குத் துணியைத் துவைப்பது என பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம் டாஸ்க்குகளையே மீண்டும் செய்யச் சொல்லப்போகிறீர்களா பிக் பாஸ்?!

- தி. விக்னேஷ்

 


Add new comment

Or log in with...