போதிய கையிருப்பை பேணாத 255 எரிபொருள் நிலைய முகவர்களுக்கு நடவடிக்கை

- 1,050 இல் 432 நிலையங்களே அனைத்து எரிபொருட்களையும் பேணியிருந்தன
- செயற்படுத்தப்படாத திட்டங்களை இரத்துச் செய்ய  CEB, SEA இற்கு உத்தரவு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் செயற்படுத்தப்படும் 255 எரிபொருள் நிரப்பு நிலைய முகவர்கள் எந்தவொரு எரிபொருளினதும் குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்கத் தவறியுள்ளதாகவும் ஒப்பந்தங்களில் நிபந்தனைகளை மீறிய குறித்த முகவர்களுக்கு எதிராக மதிப்பாய்வு செய்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் (CPSTL) ஆகியவற்றுடனான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, CPC ஆல் செயற்படுத்தப்படும் 1,050 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த வாரம் 432 எரிபொருள் நிலையங்கள் மட்டுமே அனைத்து எரிபொருட்களிலும் குறைந்தபட்ச கையிருப்பை வைத்திருந்ததாகவும், 363 முகவர்கள் ஒரு எரிபொருளுக்கான குறைந்தபட்ச கையிருப்பை வைத்திருந்த அதே வேளையில், 255 முகவர்கள் எந்தவொரு எரிபொருட்களிலும் குறைந்தபட்ச கையிருப்புக்களை பராமரிக்கத் தவறியுள்ளதாக இதன்போது தெரிய வந்துள்ளது.

எனவே குறித்த முகவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, CPC இற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 18 மாதங்களுக்கான எரிபொருள் இறக்குமதி தொடர்பான திட்டம், CPC இன் நிதிக் கையிருப்பின் நிலை மறுசீரமைப்பு, போக்குவரத்து பவுசர்களுக்கான கொடுப்பனவுகள், தேசிய எரிபொருள் அட்டை (QR) எரிபொருள் விநியோகம், நாடளாவிய எரிபொருள் விநியோகத் திட்டம், CPSTL இன் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவையும் இங்கு மதிப்பாய்வு செய்யப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒருங்கிணைப்பின் 2023-2026 மற்றும் 2026-2030 திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் நேற்று ஆராயப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

 

காலாவதியான தற்காலிக அனுமதிகளை இரத்து செய்யவும், டெண்டர் விடப்பட்டு செயற்படுத்தப்படாத திட்டங்களை இரத்து செய்யவும் இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் நிலைபேறான எரிசக்தி அதிகாரசபை  (SEA) ஆகியவற்றுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், மரபுசாரா புதுப்பிக்கத்தக்க வலுசக்தி (NCRE) மேம்பாட்டாளர்களுக்கான கொடுப்பனவுகள், புதிய கட்டணத் திட்டம், எதிர்வரும் 18 மாதங்களுக்கு மின் உற்பத்திக்கான திட்டங்கள், தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் மற்றும் வலுசக்தி அனுமதிகள் வழங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் ஆகியனவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...