சனத் நிஷாந்தவிற்கு எதிரான மனுக்களை ஜூன் 27இல் எடுக்க முடிவு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின்பேரில், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் ஜூன் 27 இல் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. மேற்படி இம்மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலவைரும் நீதிபதியுமான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதிபதி ஏ.மரிக்கார் ஆகியோர் உள்ளடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இச்சமயம் பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அதன்போது பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம விடயங்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

இதன்போது, பிரதிவாதியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாக்குமூலத்தை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்படும் காணொளி நாடாவின் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

அதனையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ரொமேஷ் டிசில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் மேற்படி மனு மீதான விசாரணைக்கான திகதியை தீர்மானிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதற்கிணங்க மேற்படி மனு மீதான விசாரணையை ஜூன் 27ம் திகதி மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.

நீதிமன்ற அதிகாரிகளின் சங்கம், விஜித குமார மற்றும் பிரியலால் சிறிசேன ஆகிய சட்டத்தரணிகள் இருவர் மூலம் இம்மூன்று மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...