ஜயசூரியவின் சாதனைகளை திமுத், மத்தியூஸ் முறியடிப்பு

டெஸ்ட கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் அஞ்சலோ மெத்திவ்ஸ் முன்னாள் வீரர் சனத் ஜனசூரியவை பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று ஆரம்பமான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 47 ஓட்டங்களை பெற்ற மத்தியூஸ் இந்த மைல்கல்லை எட்டினார்.

2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற்ற 35 வயதான மத்தியூஸ் 101 போட்டிகளில் சரியாக 7000 ஓட்டங்களை பெற்று சனத் ஜனசூரிய 110 போட்டிகளில் பெற்ற 6973 என்ற சாதனையை முறியடித்தார்.

இதில் குமார் சங்கக்கார 12400 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் மஹேல ஜயவர்தன 11814 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதேநேரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்னவும் சனத் ஜனசூரியவின் மற்றொரு சாதனையை முறியடித்தார். கருணாரத்ன நேற்று ஆரம்பமான டெஸ்டில் சரியாக 50 ஓட்டங்களை பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அதிகபட்சமாக 5980 ஓட்டங்களை பெற்றார்.

முன்னதாக ஆரம்ப வீரராக 5932 ஓட்டங்களை பெற்றிருந்த சனத் ஜயசூரியவே இந்த சாதனையை படைத்திருந்தார்.


Add new comment

Or log in with...