IMF பிரதானி கிறிஸ்டலினா ஜோஜிவா - ஜனாதிபதி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்

- இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சாதகமான பின்னணி

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தின் (02) இரவு, Zoom ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இங்கு  விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பில்,  அனைத்து தரப்பினரினாலும் சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் சீனப் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதியுடன் இந்தக் கலந்துரையாடலை நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதேபோன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பதற்காக, பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளதாக சீனப் பிரதமர் லீ க-சியாங் ( Li Keqiang) சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளதாக அண்மையில், “ப்ளூம்பேர்க்' (Bloomberg) செய்திச் சேவை, செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை, பாகிஸ்தான் போன்று, கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான பணிகளை மேற்கொள்வதாக அதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...