வாரணாசியில் ஜி20 நாடுகளின் அபிவிருத்தி அமைச்சர்கள் மாநாடு

- இந்திய வெளிவிவகார அமைச்சர் தலைமை

ஜி20 அமைப்பு நாடுகளின் அபிவிருத்தி அமைச்சர்கள் மாநாடு வாரணாசியில் நடைபெற உள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜி20 அமைப்பு நாடுகளின் கூட்டங்கள் இந்தியாவில்  நடைபெறும் முக்கிய இடங்களில் ஒன்றாக காசியும் உள்ளது. இங்கு நடைபெறும் கூட்டங்களில் ஜி20 அமைப்பு நாடுகளது அபிவிருத்தி அமைச்சர்கள் மாநாட்டு நான் தலைமை தாங்க உள்ளேன். அதனால் வாரணாசியில் என்னை அடிக்கடி பார்க்கக்கூடியதாக இருக்கும்.

தற்போது பிராந்தியத்தில் முதன்மைச் சக்தியாக விளங்கும் இந்தியா, அதிக ஆதிக்கம் செலுத்தும் நாடாகவும் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே நோக்குகிறது. இந்த முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகப் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பும் வெற்றிகளும் காணப்படுகிறது. அதனால் நமக்கும் பொறுப்புக்கள் உள்ளது. இந்தியர்களில் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களது நலன்களைக் கவனிப்பதும் நமது கடமையாகும்' என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு இப்பல்கலைக்கழகத்தின் காசி தமிழ் சங்கமம் கண்காட்சியையும் அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார் என ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...