பெறுமதி சேர் வரி திருத்தம், இறைவரி திருத்த சட்டங்கள் சபையில் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு 41 மேலதிக வாக்குகளால் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் நேற்று விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட இறைவரி திருத்தச் சட்டமூலமும் 42 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் சபையில் நிறைவேற்றப்பட்டது . பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம், இறைவரி திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதம் நேற்று காலை முதல் மாலை வரை சபையில் நடைபெற்றது. விவாதத்தின் நிறைவில் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி வாக்கெடுப்பைக் கோரினார்.

அதனையடுத்து பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு சபையில் நடைபெற்றபோது அதற்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கிணங்க 41 மேலதிக வாக்குகளால் அந்த சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூலமும் 42 மேலதிக வாக்குகளினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூல வாக்களிப்பில் 101 எம்.பி.க்களும் உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூல வாக்களிப்பில் 100 எம்.பி.க்களும் பங்கேற்கவில்லை.

இந்த திருத்தச் சட்ட மூலங்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இனணந்து எதிர்க்கட்சி பக்கத்திலுள்ள அதாவுல்லா, அலி சப்ரி ரஹீம் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்த வாக்களிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. அதேபோன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...