21ஆவது திருத்தத்திற்கு அமைய தொடர்ந்தும் 4 அமைச்சுகள் ஜனாதிபதியின் கீழ்

- பிரதமரின் இணக்கத்துடன் அதி விசேட வர்த்தமானி

அரசியலமைப்பிற்கமைய நான்கு அமைச்சுக்களது செயற்பாடுகளையும் ஜனாதிபதியின் கீழ் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு; நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு; தொழில்நுட்ப அமைச்சு; மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு; முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

இலங்கையின் 08ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 2022 ஆம் ஆண்டு  ஜூலை 21 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் மேற்படி அமைச்சுக்களைப் பொறுப்பேற்றார்.

எனினும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கமைய 44(3)ஆவது உப அரசியலமைப்பின் பிரகாரம்  ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சைத் தவிர்ந்த ஏனைய அமைச்சுக்களைப் பொறுப்பேற்பதாயின் அது தொடர்பில் அவர் பிரதமரின் கருத்துக்களைப் பெறுதல் அவசியமாகும்.

எனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி நவம்பர் முதலாம் திகதியன்று பிரதமரிடம் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கைக்கு, பிரதமர், அரசியலமைப்பின் 44(3) உப அரசியலமைப்பிற்கு அமைய நவம்பர் 04 ஆம் திகதியன்று இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பின் 44(3) உப அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதி பிரதமரிடம் அது தொடர்பில் எழுத்து மூலம் கோரியதையும் பிரதமர் அதற்கு வழங்கிய இணக்கப்பாட்டையும் கருத்திற்கொண்டு, ஏனைய நான்கு அமைச்சுகளும் தொடர்ந்து ஜனாதிபதியின் கீழ் செயற்படுமென்பதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் அதனை அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

PDF icon 2304-58_T.pdf (116.95 KB)

PDF File: 

Add new comment

Or log in with...