22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்

- 179 பேர் ஆதரவாக வாக்களிப்பு
- சரத் வீரசேகர மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பு

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற 2ஆவது வாசிப்பு மீதான் வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக 179 எம்.பிக்கள் வாக்களித்தனர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் இதற்கு எதிராக வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 3ஆவது வாசிப்பின் போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

3ஆவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் 174 பேர் ஆதரவாகவும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை எனவும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் சபாநாயகர் அறிவித்தார்.

இதன்போது சரத் வீரசேகர எம்.பி. வாக்கெடுப்பிலிருந்து தவிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் (20) இன்றும் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இன்றையதினம் வாக்கெடுப்பு இடம்பெற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

UPDATE

மஹிந்த ராஜபக்ச உட்பட 44 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை

ஆளும் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தலைமையிலான பசில் ராஜபக்ச ஆதரவு அணியினர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இவ்வாறு 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கடந்த பாராளுமன்ற அமர்வின் பொது விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருந்த போதும் அரச தரப்பான பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர் காரியவசத்தின் எதிர்ப்பினால் விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றும் நேற்று முன் தினமும் இரண்டு நாட்கள் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்ற நிலையில் நேற்று மாலை 6.15 மணிக்கு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

சட்ட மூலத்துக்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன் இணைந்து எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி., தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜீ.எல் பீரிஸ் , விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாக்களித்த அதேவேளை ஆளும் தரப்பில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எம் பி மட்டுமே எதிராக வாக்களித்தார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை நிரைவேற்ற அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 151 வாக்குகள் தேவையான நிலையில் 179 வாக்குகள் அளிக்கப்பட்டன.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களான செல்வம் அடைக்கலநாதன் , சித்தார்த்தன்,ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரன், கலையரசன் ஆகியோர் வாக்களித்த நிலையில் சுமந்திரன் எம்.பி.வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

அத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், விநோ நோகராதலிங்கம் ஆகியோர் சுகவீமனமுற்ற நிலையிலும் சாணக்கியன் எம்.பி. வெளிநாடு சென்றுள்ளதாலும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் நேற்று சபையில் சமூகமளித்திருந்த நிலையிலும் வாக்களிப்பின் போது சபையிலிருந்து வெளியேறி இருந்தனர்.


Add new comment

Or log in with...