லண்டனில் நீண்ட வரிசையில் காத்து மகாராணிக்கு மக்கள் இறுதி அஞ்சலி

காலஞ்சென்ற பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூதவுடல் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நேற்று வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

தேம்ஸ் நதிக்கரையில் 12 மணி நேரம் வரை காத்திருந்து 400,000 வரையான மக்கள் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மாலை 5 மணிக்கே பொதுமக்கள் அஞ்சலிக்காக மகாராணியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் அரங்கு திறக்கப்பட்டது. எனினும் காலை எட்டு மணிக்கே அதற்கான வரிசை பல மைல் தொலைவுக்கு நீண்டு காணப்பட்டது.

இரவு முழுவதும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை ஒட்டி கழிப்பறை மற்றும் ஏனைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மகாராணிக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்த எதிர்பார்த்திருக்கும் நிலையில் பல இலட்சம் பேருக்கு அந்த வாய்ப்பு தவறிப் போகக் கூடும் என்று பிரிட்டன் அரசு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (08) மரணித்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியை வரும் திங்கட்கிழமை (19) நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...