குழந்தைகளுக்கு உணவு புகட்டுவதுடன் மாத்திரம் பெற்றோர் நின்றுவிடக் கூடாது!

குழந்தை நல மருத்துவ நிபுணர் பீ.எம்.அர்சாத் அஹமட் தினகரனுக்கு வழங்கிய பேட்டி

காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஒரு கடமை என்பதால் தான் இதற்கு நமது முன்னோர்கள் 'காலைக்கடன்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கடன் என்பதால் கட்டாயம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை தான் என்கிறார் குழந்தை நல மருத்துவ நிபுணர் பீ.எம்.அர்சாத் அஹமட்.

மலச்சிக்கல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் கூடிக் கொண்டே செல்கிறது. சமூகத்தில் நிறைய குழந்தைகள் இந்த பிரச்சினையோடு வாழ்கிறார்கள். வளரும் இளம் சமுதாயத்தில், காலைக்கடன் கழிப்பது கஷ்டமானதாக மாறியிருக்கிறது.

அக்காலத்தில் நமது தாய்மார்கள், மூத்தம்மாமார்கள் குழந்தைகளை மலம் கழிக்க பழக்கினார்கள். தங்கள் கால்களில் தூக்கிவைத்து இருத்தி வைத்து பயிற்சி கொடுத்தார்கள். இதை ஒரு கடமையாக செய்தார்கள். ஆனால் இப்போது டயபர்(பம்பர்ஸ்) பாவனையோடு அந்தப் பழக்கம் வந்து விட்டது. பாரம்பரியத்தைப் பழக்குவதற்கு இன்று யாரும் இல்லை. டயபரைவாங்கினோமா, கட்டினோமா, கழட்டி எறிந்தோமா என்ற நிலை. இதனால், ஆறு ஏழு வயது வரைபிள்ளைகளுக்கு டயபர் அணிவிப்பவது சர்வ சாதாரணமாகி விட்டது. பெஷனாகி விட்டது.   குழந்தைகளுக்கு உணவூட்டுவதில் மட்டுமே கவனமாக இருந்தால் மட்டும் போதாது. அதிலும் இப்போது கவனம் இல்லை என்பது வேறு விஷயம். தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் ஏதாவது ஒரு உணவை/ பக்கட்டை, கடையில் வாங்கி அதை உண்ணக் கொடுத்தால் சரி என்ற நிலை. இப்படி இருக்கும் போது சாப்பிடும் உணவு எது? சாப்பிடக் கூடாத உணவு எது? சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணிக்குமா? இதையெல்லாம் கவனிப்பதற்கு யாருக்கும் நேரமும் இல்லை. யாரும் அக்கறைப்படுவதாயும் தெரியவில்லை.  

எதை உணவாக உண்டாலும், அது யாழ்ப்பாண ஒடியற் கூழாக இருந்தாலும் , இத்தாலிய பிட்சாவாகஇருந்தாலும் அல்லது ஜப்பானிய சுஷியாக இருந்தாலும் அதில் கழிவு உண்டாகும். ஜீரணிக்கப்பட்ட உணவுபோக, சத்துகள் உறிஞ்சப்பட்ட பின், மீதமுள்ளது கழிவாகும். கழிவு உடலிலிருந்து கழிக்கப்பட வேண்டும், வெளியேற்றப்பட வேண்டும். இதுதான் மனித உடற்கூற்றியல். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, பெரியவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். இது தான் ஆரம்ப அடிப்படை. 

தினமும் அல்லது இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் எளிய வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்சினைஇலகுவாக நீங்கிவிடும், குழந்தைகளும் ஆரோக்கியமாக வளரும் என்கிறார் குழந்தை நல மருத்துவ நிபுணர் டொக்டர் அர்சாத் அஹமட்.  

"தினமும் மலம் வெளியேறுகிறது ஆனால் அதுவும் சிரமத்தோடுவெளியேறுகிறது என்றால் அதுவும் சிக்கல்தான். அது மலச்சிக்கல் (Constipation) ஆகும். கழிவு இலேசாக வெளியேபோக வேண்டும். சிறுவர்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. பொதுவாக, ஒரு வயதுக்கு கீழ்தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல்கள் ஏற்படுவதில்லை. சில குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 7- தொடக்கம் 10 தடவை போகும். இன்னும் சில குழந்தைகளுக்கு 7-_10 நாட்களுக்கு ஒரு தடவை போகும். இது குறித்து பயம் கொள்ள வேண்டியதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளில் இது, ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. பிரச்சினை பக்கட் பால் மற்றும் இதரஉணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான் ஆரம்பமாகிறது.  

மலச்சிக்கலை சரிப்படுத்த, தீர்க்க நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில்குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முருங்கை, பொன்னாங்காணி, வல்லாரை, பசளி போன்ற பச்சை இலைக்கறி/கீரை வகைகளில் ஒன்றையோ, பலதையோ தினமும் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதுபோல, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளான வெண்டிக்காய், அவரை, பூசணி, பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி, கரட், பலா போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.

வாழைப்பழம், மாம்பழம்,பப்பாசி போன்ற பழங்களை மென்று தின்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும். இவைகள், இயற்கை தந்தசிறந்த மலமிலக்கிகள்(Laxatives). ஜூஸ் போடுவதால் அதன் நார்ச்சத்து நீங்கி விடும். மலச்சிக்கலுக்கு பலன் கிடைக்காது. எனவே கடித்து தின்பதற்கு பழக்க வேண்டும். இதை விட, இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளை அல்லது அத்திப் பழம்(fig fruit) ஒன்றை அல்லது ஒரு சில பேரீச்சம்பழங்களை(Dates) , காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இவைகள் இன்னும்இலேசாக மலம் வெளிவர உதவி புரியும்.    மலச்சிக்கல் உள்ள பிள்ளைகளை, தினமும் காலையும் மாலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது Bathtub இல், குழந்தையின் இடுப்பளவு தாங்கும் அளவு வெதுவெதுப்பான சுடுநீரில், 10- தொடக்கம் 15 நிமிடங்கள் வரை உட்கார வைக்கலாம். இதனால் குழந்தைகளின் அடிவயிற்று தசைகள், மலவாய் ஆகியவை சற்று தளர்வடையும். மலம்கழிக்க இலகுவாகும். மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளாக இருந்தால் சைக்கிள் ஓட்டுவது நல்ல பயிற்சி. இது இடுப்பு மற்றும் கால் தசைகளை உறுதியாக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும்.   சரியான நேரத்துக்கு தூங்கவும்‌, எழும்பவும் பழக்கப்படுத்துவது மிகவும் அவசியம். நிறையப் பெற்றோர் இதில் அலட்சியமாக இருக்கிறார்கள். 

அதுபோல, ஒவ்வொரு நாள் காலையிலும், சரியாக ஒரே நேரத்தில், குழந்தைகளை கழிவறை சென்று வருவதற்கு தினசரி ஒரு நேரத்தைப் பழக்கப்படுத்துவது மிகவும் அத்தியாவசியம்.  

சொக்லேட், சுவையூட்டப்பட்ட பால், மோல்ட், கோப்பி, இனிப்பு பண்டங்கள், துரித உணவுகள் மலச்சிக்கலை தூண்டும். இன்னும் சிக்கலாக்கும்.  மலச்சிக்கலை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நூறு வீதம் வெற்றி நிச்சயம். நாட்பட்டமலச் சிக்கல் சிக்கலாகவே அமையும். ஆகவே தாமதிக்காமல் கட்டாயம் உரிய அனுபவமும், தெளிவும் உள்ளவைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.  காலைக் கடன் கழிக்கும் நிலையில் உள்ள எல்லோருக்கும் இங்கே சொல்லப்பட்டவை பயன் தரும். அவர்கள சிறுவர்களாக இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்கிறார் சிறுவர் நல மருத்துவநிபுணர் டொக்டர் அர்சாத் அஹமட். 

 
றிசாத் ஏ காதர்  
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)
 

Add new comment

Or log in with...