எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதில் தீவிரமான கரிசனை

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழலில், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமுள்ளது. அத்தோடு எரிபொருளுக்காக காத்திருப்போரின் வரிசையும் நீண்டு சென்று கொண்டிருக்கின்றது.

அதேநேரம் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அதன் பாவனையாளர்கள் அனுபவிக்கும் அசௌகரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியிருந்தும் பொறுமை காத்தவர்களாக நாட்கணக்கில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் காத்திருந்து அதனைப் பெற்றுக் கொள்கின்றனர். எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட எல்லா தொழிற்றுறைகளும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருளுக்கான நெருக்கடி நிலையை நோக்கும் போது இந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக எரிபொருள் விளங்குவதாகத் தெரிகிறது. இதனையே நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இருந்த போதிலும் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்றது முதல் அதன் தாக்கமும் அழுத்தங்களும் மக்களுக்கு சுமையாகவும் பாதிப்பாகவும் அமைவதைத் தவிர்ப்பதில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி தோற்றம் பெற்றது தொடக்கம் இந்தியா இலங்கைக்கு பல்வேறு உதவி ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றது. அவற்றில் எரிபொருள் குறிப்பிடத்தக்க உதவியாகும். என்றாலும் இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் முடிவுற்றுள்ளது. இதன் விளைவாக நாட்டில் எரிபொருளுக்கான நெருக்கடி அதிகரித்து இருக்கின்றது.

இருந்த போதிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி, ஒத்துழைப்புக்களை நல்குவது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய உயர்மட்டக் குழுவொன்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் கோத்ரா தலைமையில் கடந்த வாரம் கொழும்புக்கு வருகை தந்திருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த இக்குழுவினர், 'தற்போதைய நெருக்கடியில் இருந்து மீளுவதற்காக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உச்சளவு ஒத்துழைப்பை நல்கும்' என்று குறிப்பிட்டனர்.

அதேநேரம் இக்குழுவினருடனான சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 'இந்தியத் தூதுக்குழுவினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்திருந்தது' என்றுள்ளார்.

இவ்வாறான சூழலில் இந்திய பெற்றோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங்க்பூரியை இந்தியாவுக்காக இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட நேற்று சந்தித்து எரிபொருள் தொடர்பான இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

இதேவேளை நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக இரண்டு அமைச்சர்களை மொஸ்கோவுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தி இருந்தார்.

இவை இவ்வாறிருக்க, தற்போதைய எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காண எரிபொருட்களை உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளது உதவி, ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த அடிப்படையில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீரும் முதற்கட்டமாக கட்டாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டாரில் அரச உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவர்களது கட்டாருக்கான விஜயம் நிறைவடைந்ததும் ஏனைய அரபு நாடுகளுக்கும் விஜயம் செய்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு நாடு முகம் கொடுத்துள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக விரிவான அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்சி பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு கட்சி நலன்களுக்கு அப்பால் ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கப்பட வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.


Add new comment

Or log in with...