சிறுபான்மையினரை அவமதிக்கும் வகையில் 'ட்வீட்' விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை

- குவைத்திலுள்ள இந்திய தூதரகம்

சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குவைத்திலுள்ள இந்தியா தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

குவைத் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே குவைத்திலுள்ள இந்திய தூதரகத்தின் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரிரு தனிநபர்கள், சிறுபான்மையினரை ஆத்திரமூட்டச் செய்யும் சில புண்படுத்தும் கருத்துகளை ட்வீட்டரில் விடுத்துள்ளமை குறித்து குவைத் நாட்டின் வெளிவிவகார அலுவலகத்தில் தூதுவர் சி.பி ஜோர்ஜ் சந்திப்பொன்றை நடத்தினார்.

இது தொடர்பில் தூதரகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், ட்வீட்டில் தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தவர்கள் மீது ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிப்படுவதை அழுத்திக்கூறும் வகையிலும் எந்தவொரு மத ஆளுமையையும் அவமதிப்பதற்கோ அல்லது எந்தவொரு மதத்தை அல்லது பிரிவினரை இழிவுபடுத்தி குற்றஞ்சாட்டுவதற்கோ இடமளிக்காத வகையிலும் அறிக்கையொன்றும்  விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-குவைத் நட்புறவுகளுக்கு எதிரான சக்திகள் இந்த இழிவான கருத்துகளைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டி விட முயற்சிக்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக பாரதிய ஜனதா கட்சி, அதன் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை கட்சியின் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்து இடைநிறுத்தியுள்ளது. அத்தோடு நவீன் குமார் ஜிண்டாலை கட்சியின் டெல்லி ஊடகப் பொறுப்பாளர் பதவியிருந்தும் வெளியேற்றியுள்ளது.    இவர்களது ட்வீட்டுகள் இந்திய அரசாங்கத்தின் கருத்துகளை எவ்விதத்திலும் பிரதிபலிப்பவை அல்ல. எமது நாகரிக மரபுரிமை மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான கலாசார மரபுகளுக்கு அமைய, இந்திய அரசாங்கம் அனைத்து மதங்களுக்கும் மிக உயர்ந்த மதிப்பளிக்கின்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் வலிமையை சீர்குலைக்கும் நோக்கில் சில தீய சக்திகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதேவேளை, சிறுபான்மையினரை ஆத்திரமூட்டச் செய்யும் சர்ச்சைக்குரிய கருத்துகள் இந்திய அரசாங்கத்தின் கருத்துகள் அல்ல  என்று கட்டாருக்கு இந்தியா ஏற்கனவே தெரிவித்திருப்பதும் தெரிந்ததே ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...