ஏற்றுமதிப் பொருள் தொழிற்சாலைகளுக்கு மின்சார விநியோகத்தில் முன்னுரிமை

கண்டி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்

கண்டி மாவட்டத்தில் ஏற்றுமதி சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட பல அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு அதிக முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்றுமதி வருமானத்தின் முன்னோடிகளுக்கு தொடர்ச்சியான வசதிகளை வழங்கும் வகையில் கண்டி மாவட்டத்தின் பல்லேக்கலேவில் அமைந்துள்ள கைத்தொழில் பூங்கா, முதலீட்டுச் சபை, நீர் இறைக்கும் நிலையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் ஆகியனவற்றுக்கும் முன்னுரிமை வழங்குவது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பது குறித்து, கண்டி மாவட்ட செயலகத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் இதனைத் தெரிவித்தார்.

மேலும் எரிபொருள், மின்சாரம், சமையல் எரிவாயு, பொதுப்போக்குவரத்து மற்றும் உணவு விநியோகங்களை பராமரிப்பது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்படடது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நிர்வாகப் பிரிவுக்கு எரிபொருள் விநியோகிக்கும் முறைமை குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது. பொதுப் போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் யட்டிநுவர டிப்போவிற்கு எரிபொருளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அதேவேளை மினிப்பே நீர்ப்பாசனத் திட்டத்தில் விவசாயத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. எதிர்காலத்தில் எரிவாயு விநியோகம் தொடர்பில் குறைபாடுகள் உருவாகின்ற வேளையில், விறகு அல்லது மாற்று முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுக்குப் பதிலாக உணவு தயாரிக்கக் கூடிய உலர் உணவுகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கண்டி மாவட்டத்தில் உணவுப் பயிர்களைப் பயிரிடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்துக்கு உகந்தது எனத் தெரிவித்த மாவட்ட செயலாளர், வீட்டுத் தோட்டத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இடைத்தரகர்கள் பெரும் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இடைத்தரகர்களை குறைத்து, வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட வர்த்தக சங்கங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக இலாபம் ஈட்டும் நோக்கத்தில் பண்டங்களை பதுக்கி வைத்து களஞ்சியப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட மாவட்ட செயலாளர், அவ்வாறு விலை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், பரிசோதனைகளை ஆரம்பிக்க நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

இக்கலந்துரையாடலில் கண்டி மேலதிக மாவட்ட செயலாளர்களான உத்பல ஜயரத்ன, லலித் எட்டம் பாவல மற்றும் கண்டி மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், பாதுகாப்புப் படையினர், அத்தியாவசிய சேவைகள் தொடர்பான உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஏ.அமீனுல்லா...?


Add new comment

Or log in with...