கிண்ணியா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

கிண்ணியா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மூவர் கைது-Trincomalee-Kinniya Shooting-2 Injured-3 Arrested

திருகோணமலை, கிண்ணியா – நடுஊற்று பகுதியில் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், கிண்ணியா, சூரங்கல் பகுதியைச் சேர்ந்த பீர் முகம்மது முகம்மது முஜீப் (30) எனும் மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றி வரும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மார்ச் 03 - 10 வரை விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் கிண்ணியா, முனைச்சேனை பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையில் சாரதியாக கடமையாற்றி வரும்  நூர் முஹம்மது ரபீக் (34) மற்றும் ஹமீது லெப்பை ஹசுறுல்லா (42) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 09 ரவைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

நடுஊற்று பகுதியிலுள்ள களப்புக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டதாக கிண்ணியா  பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த துப்பாக்கிச் சூட்டில் கிண்ணியா 05, குட்டி கராச்சி பகுதியைச் சேர்ந்த தாஜிது முகமது வசீம் (30), சாகுல் ஹமீது முகம்மது ரமீஸ் (33) ஆகிய இருவரும் காயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு தரப்பினருக்கிடையிலான தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என  பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...