மீண்டுமொரு கொவிட் அலை உருவெடுக்குமென அச்சம்!

சீனாவின் வூஹான் நகரில் தோற்றம் பெற்ற கொவிட் 19 தொற்றின் பரவுதல் அச்சுறுத்தலும் தாக்கங்களும் இன்னும் முழுமையான கட்டுப்பாட்டை அடைந்ததாக இல்லை. இரண்டு வருடங்களாகியும் அவை நீடித்த வண்ணமே உள்ளன.

அண்மைக்கால வரலாற்றில் மனித சமூகத்தில் அதிக எண்ணிக்கையானோரைப் பாதித்துள்ளதோடு மட்டுமல்லாமல் ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவு கொண்டதாகவும் உள்ளது இவ்வைரஸ் தொற்று.

கொவிட் 19 தொற்றானது, கடந்த இரு வருட காலப் பகுதியில் பல பிறழ்வுகளை கண்டிருக்கின்றது. அவற்றில் நான்கைந்து பிறழ்வுகள் உலகில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் டெல்டா திரிபு உலகெங்கிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடும் சிரமங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் இத்திரிபு பெருவீழ்ச்சி நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் அப்பிறழ்வின் தாக்கம் முழுமையான கட்டுப்பாட்டை அடைவதற்குள் மற்றொரு பிறழ்வாக ஒமிக்ரோன் தோற்றம் பெற்றுள்ளது.

இப்பிறழ்வும் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகின்றது. இது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத பிறழ்வாகக் கருதப்படுகின்ற போதிலும், இற்றை வரையும் ஏற்பட்ட பிறழ்வுகளை விடவும் எட்டு மடங்கு வேகமாகப் பரவக் கூடியதாக உள்ளது. குறிப்பாக நாளொன்றுக்கு இலட்சக்கணக்கானோர் இத்தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே ஏற்பட்ட பிறழ்வுகளைப் போன்று ஒமிக்ரோன் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாத ஒன்றாக விளங்கினாலும், இரண்டு விதமான அச்சங்கள் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று நீண்ட கால கொவிட் பாதிப்பாக இது அமைந்து விடுமோ என்ற அச்சம். மற்றையது இப்பிறழ்வு டெல்டா திரிவுடன் இணைந்து அல்லது கலந்து மற்றொரு புதிய பிறழ்வை உருவாக்கி விடுமோ என்ற அச்சம்.

இந்நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ், கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஒமிக்ரோன் பிறழ்வின் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் பல்வேறு விதமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றன.

இவ்வாறான சூழலில் இந்நாட்டில் கடந்த இரண்டொரு தினங்களாக கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகின்றவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் மூலக்கூற்று மருத்துவ பீடப் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர, ‘இந்நாட்டில் இற்றைவரையும் 200 இற்கும் மேற்பட்டவர்கள் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பகுதியினர் நாட்டின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை சுகாதார இராஜாங்க அமைச்சின் பிரதான ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி, ‘கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது என்றும் இவ்வாறு சிகிச்சை பெறுபவர்கள் மத்தியில் ஒட்சிசன் சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவை ஆரோக்கியமான விடயங்கள் அல்ல. ஏற்கனவே டெல்டா திரிபு அலை கடும் சிரமங்களின் ஊடாகக் கட்டுப்படுத்தப்பட்டு, நாட்டில் இயல்பு நிலை ஏற்பட்டுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு தடுப்பூசி வழங்குதலும் பெரிதும் உதவியது.

ஆனாலும் இத்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் பெருவீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கொவிட் 19 தொற்று பரவுதல் தவிர்ப்புக்கான அடிப்படைச் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் கவனயீனமும் அசிரத்தையும் மக்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்துள்ளது. சமூக இடைவெளி என்பது சற்றும் இல்லாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் கூட ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு முகக்கவசம் அணியாமல் நடமாடுவோரை சமூகத்தில் பரவலாகக் காண முடிகின்றது.

ஆனால் கொவிட் 19 தொற்றின் அச்சுறுத்தல் நீடித்து வரும் சூழலில் மக்கள் இவ்வாறு நடந்து கொள்வதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தொற்றின் பரவுதல் இன்னும் முழுமையாகக் கட்டுப்பாட்டை அடையவில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே அடிப்படைச் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பேணியபடி கொவிட் 19 தொற்றைத் தவிர்த்துக் கொள்வதில் தொடர்ந்தும் முன்னெச்சரிக்கையோடும் விழிப்புணர்வுடனும் ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும். அத்தோடு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவும் தவறக் கூடாது. இவற்றின் ஊடாக கடந்த காலங்களைப் போன்று இத்தொற்று மீண்டும் தலைதூக்காது தவிர்த்துக் கொள்ளலாம்.


Add new comment

Or log in with...