கண்டியில் பயணிகள் இளைப்பாறவும், வாகன தரிப்பிடத்துக்கும் பூங்காக்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைப்பு

கண்டி மாநகரின் பிரதான வாகனக் கட்டடத் தொகுதியின் மேல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'டொம்லின் பூங்கா' மற்றும் 'சஹஸ் பூங்கா ' ஆகியன மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பூங்காக்களை வைபவரீதியாக திறந்து வைத்தார்.

இவற்றை உலக வங்கியின் நிதியுதவியுடன் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக கண்டி மாநகர சபை நிர்மாணித்துள்ளது.டொம்லின் பூங்காவின் நினைவுப் பலகையை பிரதமர் திறந்து வைத்தார்.

மேலும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை தரிசிக்க வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அவர்கள் இளைப்பாறுவதற்கு அறைகள், சுகாதார வசதிகள் மற்றும் 16 விற்பனை நிலையங்களைக் கொண்ட டொம்லின் பூங்காவை நிர்மாணிப்பதற்காக உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 374 மில்லியன் ரூபா ​செலவிடப்பட்டுள்ளது.

அதுபோன்று சஹஸ் உயன 'நகர்ப்புற வாகன நிறுத்தப் பூங்கா'- பகுதிக்கு விஜயம் செய்த பிரதமர் அதன் நினைவுப் பலகையை திறந்து வைத்தார். திறந்தவெளி அரங்கு, கைவினைப் பொருட்கள் கட்டடத் தொகுதி, உணவருந்தும் பகுதி மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவற்றைக் கொண்ட இந்தப் பூங்காவில் ஓய்வெடுக்கும் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவிற்கு உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் 531 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டறுவே உபாலி தேரர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ஷ, உதயன கிரிந்திகொட, கண்டி மேயர் கேசர சேனாநாயக்க, பிரதி மேயர் இலாஹி ஆபிதீன், கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மத்திய மாகாண பணிப்பாளர் பீ.குணதிலக உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

"ஜனாதிபதி எமது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். ஜனாதிபதியும் பிரதமரும் இந்நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

நாம் முதலில் முதலில் நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கடுத்தாற் போல் எமது கடமை, எமது குடும்பம் மற்றும் எம்மைப் பற்றி பற்றி சிந்திக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் அதனை தலைக்கீழாகவே பின்பற்றுகிறார்கள். முதலில் தங்களைப் பற்றியும், பின்னர் குடும்பத்தைப் பற்றி, அதன் பின்னர் கடமையைப் பற்றி, இறுதியாக நாட்டைப் பற்றி சிந்திக்கிறார்கள். எனவே, அந்தப் பாதையை மாற்றுவதற்கான நாட்டின் தலைமை இப்போது எங்களிடம் உள்ளது. நாம் நமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். நாட்டில் நாம் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கு மட்டும் பொறுப்புகள் வழங்கப்படுமானால் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்புவது கடினமாகும். எனவே, குடிமக்களாகிய நாம் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது உண்மையில் முக்கியமானது" என அனுநாயக்க தேரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

"தலதா மாளிகைக்கு தரிசனம் செய்ய வரும் மக்களும் பக்தர்களும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு கண்டியில் இடமில்லை. இத்திட்டத்தின் மூலம் வெகு தொலைவில் இருந்து பேருந்தில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், தம்மை தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், பூஜைக்கு தயார் செய்து கொள்வதற்கும், வழிபாட்டிற்கு தயாராவதற்கும் நான்கு மாடி கட்டடம் இத்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ளது"என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரையாற்றுகையில் தெரிவித்தார்.

"30 வருட கால பயங்கரவாதத்தை ஒழித்து இந்த நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டைக் காத்த துணிச்சல்மிக்க தலைவராக பிரதமர் இலங்கை வரலாற்றில் இடம்பெறுகிறார். பிரதமர் மக்களால் மதிக்கப்படும் மக்கள் தலைவர் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பிரதமரின் அரசியல் வாழ்க்கைக்கு இன்றுடன் 52 ஆண்டுகள் பூர்த்தியாகிறது. கொவிட் தொற்றுநோயால் நாம் அனைவரும் பல சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில் இந்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க கிடைத்தமையினால் நாமும் கண்டி மக்களும் பாக்கியம் செய்தவர்களாவர். இதற்காக கண்டி மாநகர சபையின் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்" என கண்டி மேயர் கேசர சேனாநாயக்க தெரிவித்தார்.

எம்.ஏ.அமீனுல்லா


Add new comment

Or log in with...