பானுக ராஜபக்‌ஷ, அஞ்செலோ பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்டவீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கான நிலைப்பாட்டில் இருப்பதாக அறிய முடிகிறது.அத்துடன் இலங்கை அணியின் மற்றொரு வீரர் அஞ்செலோ பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பானுக்க ராஜபக்ஷ தான் ஓய்வு பெறும் நிலைப்பாட்டில் இருக்கும் விடயம் பற்றி, இலங்கை கிரிக்கெட் இற்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் உருவாக்கியிருக்கும் உடற்தகுதி பரிசோதனைகளின் சிக்கல் தன்மையினை கருத்திற் கொண்டிருக்கும் பானுக்க ராஜபக்ஷ தனது வேண்டுகோள்கள் பூர்த்தி செய்யப்படாதபட்சத்தில் ஓய்வு பெறுவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பப்படுகின்றது.

அதன்படி தான் வழங்கியுள்ள கடிதத்தில் இம்மாதம் 7ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் உடற்தகுதி பரிசோதனையில் இருந்து கடந்த ஆறு மாதகாலமாக இடம்பெற்ற தொடர் கிரிக்கெட் தொடர்கள் கருதி தனக்கு விடுகை தருமாறு பானுக்க ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பானுக்க ராஜபக்ஷ தனக்கான உடற்தகுதிப் பரிசோதனையினை சிம்பாப்வே, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர்களின் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இம்மாதம் 16ஆம் திகதி இலங்கை – சிம்பாப்வே அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பல்லேகலேயில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த தொடரில் பங்கெடுக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் உடற்தகுதி பரிசோதனையாக 2 கிலோ மீற்றர் துாரத்தினை 8 நிமிடம் 10 செக்கன்களில் ஓடி முடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, ஏனைய உடற்தகுதி பரிசோதனையான Skin Fold சோதனையில் 70 இற்கு குறைவான பெறுபேறுகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

2021ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 5 ஒருநாள் போட்டிகள் அடங்கலாக 18 ரி 20 போட்டிகளில் ஆடிய பானுக்க ராஜபக்ஷ திருப்புமுனையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, நடைபெற்று முடிந்த ரி 20 உலகக் கிண்ணத் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 143.51 என்கிற Strike Rate உடன் 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அஞ்செலோ பெரேரா (31 வயது) இலங்கை அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 6 ரி 20 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள நிலையில், திடீரென இந்த ஒய்வு தீர்மானத்தை வெளியிட்டுள்ளார். இவர் 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியிருந்ததுடன், 2019ம் ஆண்டு இறுதியாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்தார்.

அஞ்செலோ பெரேரா உள்ளூர் போட்டிகள் மற்றும் சர்வதேசத்தில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம், வெளிநாடொன்றுக்கு குடிபெயர வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் உள்ளூர் போட்டிகளில் அதிகமாக விளையாடியுள்ள இவர், என்.சி.சி கழகத்துக்காக பல வருடங்கள் விளையாடியுள்ளார் என்பதுடன், உள்ளூர் போட்டிகளில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகின்றார்.

மொத்தமாக 107 முதற்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 48.08 என்ற சராசரியை கொண்டிருப்பதுடன், 150 லிஸ்ட் ஏ போட்டிகளில் 42 என்ற ஓட்ட சராசரியையும் கொண்டுள்ளார். இவர் இறுதியாக நடைபெற்றுமுடிந்த லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி வொரியர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...