யுகதனவி ஒப்பந்தம் அடுத்த வாரம் சபையில் சமர்ப்பிப்பு

மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு 

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தின் கீழ் எந்த ஒரு கம்பனிக்கும் ஏகபோக உரிமை வழங்கப்படவில்லை.இது தொடர்பான ஒப்பந்தத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.மன்னார் படுகையில் எண்ணெய் அகழ்வு தொடர்பில் ஏக போக உரிமையும் வழங்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரச சொத்துக்களை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் என தொடர்பில் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பிரதமர் சார்பில் பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பிரதமர் சார்பில் மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே பதில் வழங்க முற்பட்டதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. நிலையியற் கட்டளைக்கமைய பிரதமரே பதில் வழங்க வேண்டும் எனவும் மேலதிகமாகவே அமைச்சர் பதில் வழங்கலாம் எனவும் மரிக்கார் எம்.பி தெரிவித்தார். 

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார மற்றும் புத்திக பதிரன ஆகியோர் கருத்து வெளியிட்டனர். பிரதமர் சார்பில் அமைச்சருக்கு பதில் வழங்க முடியும் எனவும் கடந்த காலத்திலும் இந்த சம்பிரதாயம் பின்பற்றப்பட்டதாகவும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து அமைச்சர் பதில் வழங்கியதோடு எந்த அடிப்படையில் இதன் பங்குகள் வழங்கப்பட்டன.ஒப்பந்தத்தின் பிரதிகளை சபைக்கு எப்பொழுது வழங்கப்படும் என மரிக்கார் எம்.பி கேள்வி எழுப்பினார். 

அடுத்த வாரம் ஒப்பந்த பிரதியை பாராளுமன்றத்திற்கு வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். 

அனல் மின் நிலையங்களை தனியாருக்கு வழங்க 1990 களில் தான் முடிவு செய்யப்பட்டது. பல இடங்களில் அவை ஆரம்பிக்கப்பட்டன. களனிதிஸ்ஸ கம்பனியை அமெரிக்க கம்பனியே தயாரித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்