கொவிட் இடர்காலத்தில் ஆசிரியர்கள் தமது பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும்

தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, எதிர்காலத்தில் நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை அடியொற்றியே மாணவர்களும் தமது பாதையை வகுத்துக் கொள்கின்றனர்.

கொரோனாவுக்கு பின்னரான காலப் பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதனை முதலில் கருத்தில் கொள்ள வேண்டியவர்கள் ஆசிரியர்களாவர்.

பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும் என்ற அறிவிப்பானது தற்போது நிம்மதி தருகின்றது. ஆனாலும் மாணவர்களின் கல்வியில் வீழ்ச்சி இருப்பதை மறந்து விட முடியாது.

யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ‘ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற் கொண்டு அங்கீகாரமளித்தல்’ என்ற தொனிப்பொருளுடன் அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்புக்கு மரியாதை செய்யும் முகமாக ஒக்டோபர் 6 ஆம் திகதியை உலக ஆசிரியர் தினமாக அறிவித்துள்ளது.

இன்று ஆசிரியர்களின் பங்களிப்பு மிக அவசியமானதாக உள்ளது. ஒன்லைன் வாயிலாக கற்பிக்க வேண்டிய அவசியத்தில் அவர்கள் உள்ளனர். ஆனால் ஆசிரியர்களில் பலர் ஒன்லைன் கல்வியையே கற்பிக்காமல் அலட்சியமாக உள்ளதாக மாணவர்களும் பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர். எனினும் மற்றொரு தரப்பு ஆசிரியர்கள் தமது பொறுப்பை உணர்ந்து அர்ப்பணிப்புடன் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய கொவிட் அச்சுறுத்தலில் எதிர்கால சமுதாயத்தின் நலன் கருதி குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியை கல்வியில் எதிர்பார்க்க வேண்டுமாக இருந்தால் உடனடியாக ஒன்லைன் கல்விச் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக இருந்தால் 20 மாதங்களுக்கு மேலாகியும் பாடசாலை கல்வி இல்லை என்கின்ற நிலை காணப்படுகின்றது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியானது எந்த அளவு சாத்தியம் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. பொருளாதார ரீதியில் பலமான மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய நிலையும், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் காணப்படுகிற மாணவர்கள் அங்கே கையடக்கத் தொலைபேசிகள் இல்லாத நிலையில் இந்த நவீன தொழில்நுட்பத்தினால் இணைய வசதிகளுக்கு அதிகளவு பணத்தினை செலவழிக்கும் நிலையும் உள்ளது.

மாணவர்ளிடம் உரிய கையடக்கத் தொலைபேசி காணப்பட்டாலும் இணைய வழியில் கற்பதற்கு இணையத்திற்கு பணம் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளது. இலவசக் கல்விக்கு முன்னுதாரணமாகத் திகழும் இலங்கையிலும் இன்று இக்கட்டான நிலை காணப்படுகிறது.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது ஆசிரியர்கள் குழந்தைகளாகவே மாறி விட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களின் முழுக்கவனமும் ஆசிரியர்கள் மீது செல்லும். அவ்வாறு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவர்களின் மழலைப் பேச்சையும், மழலைச் சிரிப்பையும் காணும் பொழுது புதிய உலகிற்குச் சென்ற ஓர் உன்னத உணர்வு ஆசிரியர் மனதில் ஏற்படும்.

ஆசிரியர்களை கௌரவிக்கின்ற தினமாக மட்டும் இன்றைய தினம் அமைந்து விடலாகாது.கல்விக் கண் திறக்கின்ற ஆசிரியர்கள் தங்களது பொறுப்பை சரிவர உணர்ந்து செயற்படவும் வேண்டும்.

-ஆர்.நடராஜன்
(பனங்காடு தினகரன் நிருபர்)