ஊடகவியலாளர்கள் CIDக்கு அழைக்கப்பட்டமைக்கு வருத்தம்

ஊடக சந்திப்பில் ஊடக அமைச்சர் டளஸ் கவலை

ச.தொ.ச வெள்ளைப் பூடு விவகாரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஊடகவியலாளர்கள் சிலர் அழைக்கப்பட்டது தொடர்பில் கவலை அடைவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்  ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

எங்கோ தவறு நடந்திருப்பதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் பிரதமரும் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் தலையீடு செய்ததை தொடர்ந்து ஊடகவியலாளர்களை அழைக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று நடைபெற்றது.

ச.தொ.ச வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை சி.ஐ.டி விசாரணைக்கு அழைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

சி.ஐ.டிக்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டது குறித்து எனக்கு பல்வேறு தரப்பினரும் அறிவித்திருந்தனர். ஐலண்ட் மற்றும் லங்காதீப பத்திரிகைகளும் அறிவித்திருந்தன. இது தொடர்பில் கடுமையான எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அரசாங்கம் என்ற வகையில் இதனை நிராகரிக்கிறோம். இது நடக்கக் கூடாத விடயமாகும். எக்காரணம் கொண்டும் ஊடகவியலாளர்களை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரிக்கக் கூடாதென பிரதமர் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரத் வீரசேகரவும் இது தொடர்பில் தெளிவு படுத்தியுள்ளார். லங்காதீப ஆசிரியர் சிறிரனசிங்க கூட ஒரு தடவை ஆசிரிய தலைப்பு தொடர்பில் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார். இது தவிர ஆறு பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இங்கு ஏதோ தவறு நடந்துள்ளது. வெள்ளைப்பூடு விவகாரம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்த்தன மீதும் இராஜாங்க அமைச்சர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் முறைப்பாடு செய்தார்.அவர் யாரையும் எந்த நிறுவனத்தையும் பெயரிடவில்லை. அமைச்சர் பந்துல ஒருபோதும் மோசடிகளுடன் தொடர்புள்ளவர் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். அவர் முறையிட்டது நியாயமானது. ஆனால் எங்கோ குழப்பம் நடந்துள்ளது.

ஊடகவியலாளராக இருந்து இன்று ஊடக அமைச்சராக இருப்பவர் டளஸ் அழகப்பெரும. ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டதை ஒருபோதும் நான் அனுமதிக்கவில்லை. பிரதமர் மற்றும் பொறுப்பான அமைச்சர் ஆகியோர் இதில் தலையிட்டது குறித்து நன்றி தெரிவிக்கிறேன். ஊடகவியலாளர்கள் எவரும் அழைக்கப்படமாட்டார்கள் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறேன். இது தொடர்பில் அவர்களுக்கு எமது வருத்தத்தை தெரிவிக்கிறோம்.

ஷம்ஸ் பாஹிம்