தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் கனிந்து வரும் நம்பிக்கைகள்!

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்ஸுடன் நடத்திய சந்திப்பிலும் இது தொடர்பில் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 வது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, ஐ.நா பொதுச்சபை அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் ஐ.நா. செயலாளரைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது நடைமுறை விவகாரங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாறப்பட்டதோடு, குறிப்பாக, தமிழ்க் கைதிகள் விடயம் குறித்து ஜனாதிபதி விபரமாக குறிப்பிட்டிருக்கின்றார்.

'நான் பதவிக்கு வந்த பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை நான் விடுதலை செய்துள்ளேன். அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட காலமாகத் தடுப்புக் காவலிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் தடுப்பில் இருந்துள்ள காலத்தைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அவர்களை விடுவிக்க நான் தயங்க மாட்டேன்' என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு உள்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறான சூழலில், அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த ஞாயிறன்று விஜயம் செய்த நீதியமைச்சர் அலி சப்ரி, தமிழ்க் கைதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அண்மையில் சிறைக்கு விஜயம் செய்து கைதிகள் மீது அழுத்தம் பிரயோகித்ததாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க் கட்சியின் சில எம்.பிக்களும் தெரிவித்துள்ளமை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

அச்சமயம் தமிழ்க் கைதிகள், தமக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை என்றும், அது இன ரீதியாக இடம்பெற்ற சம்பவமும் அல்ல என்றும் கூறியுள்ளதோடு, இச்சிறையில் தமக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லையெனவும், ஆனால் தமது உறவினர்கள் எமக்காக எடுத்து வரும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களுடனான சந்திப்பை இலகுபடுத்தும் வகையிலும் தம்மை, தமது சொந்தப் பிரதேசங்களிலுள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்தால் நல்லது' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இச்சமயம் அமைச்சர் அலி சப்ரி, 'தமிழ்க் கைதிகளின் விவகாரம் மனிதாபிமானமாக நோக்கப்படும்' என்றும் 'இக்கைதிகளுக்கான பொருட்களை உறவினர்கள் யாழ்ப்பாணம் அல்லது வவுனியா சிறையில் வழங்கினால் அவற்றை அவர்களுக்கு கிடைக்கப் பெற வழி செய்து கொடுக்கப்படும்' என்றும் 'வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டால் யாழ்ப்பாணம் அல்லது வவுனியா சிறை அலுவலகங்களுக்கு சென்றால் அதற்கான ஏற்பாடுகளை அங்கு செய்து கொடுக்க முடியும்' என்றும் கூறியுள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பிலான இந்த அறிவிப்புகளும் அணுகுமுறைகளும் இவ்விவகாரத்தில் ஜனாதிபதியும் அரசாங்கமும் எவ்வளவு தூரம் மனிதாபிமானக் கரிசனையோடு செயற்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றன.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அநுராதபுர சிறையில் நடந்து கொண்டதாத் தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடிப்படையாககக் கொண்டு அற்ப அரசியல் இலாபம் அடைந்து கொள்ளும் நோக்கில் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். ஆனால் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, குறித்த அமைச்சு பதவியிலிருந்து விலகியுள்ளதோடு அச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

இவ்வாறான நிலையில் இக்கைதிகள் விவகாரத்தில் அற்ப அரசியல் இலாபம் அடைந்து கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மக்கள் அறியாதவர்கள் அல்லர். ஆனால் இக்கைதிகளின் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். இது தொடர்பில் தமிழ்க் கைதிகள் மத்தியிலும் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் உருவாகியுள்ளன. அதனால் இத்தமிழ்க் கைதிகளின் விவகாரத்திற்கு தீர்வு கனிந்து வரும் சூழலில் அற்ப அரசியல் இலாபம் பெறும் வகையில் எவரும் அதனைக் குழப்பியடித்து விடக் கூடாது என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கு ஏற்ப செயற்படுவது த.தே.கூ மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் பொறுப்பாகும்.