வெற்றுக்கோஷங்களுக்கு பின்னால் தமிழ் மக்கள் செல்வது அபத்தமானது

கல்முனையில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க

தமிழீழத்தைப் பெற்றுத்தருவோம், சமஷ்டி ஆட்சி முறையை பெற்றுத்தருவோம், மாகாண சபைகளுக்கான கூடுதல் அதிகாரங்களை பெற்றுத்தருவோம் என்றெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த 70 வருட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் நினைத்திருந்தால் மைத்திரி- ரணில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு முட்டுக்கட்டை கொடுத்திருந்த வேளையில் தமிழ் மக்களுக்கான பல உரிமைகளையும் சலுகைகளையும் இலகுவாக பெற்றுக் கொடுத்திருக்க முடியும். இனியாவது தமிழ் மக்கள் போலித்தேசியம் பேசிக்கொண்டு ஏமாற்று வித்தை காட்டும் தமிழ்த் தேசியத்தின் பின்னால் செல்லக்கூடாது.

இவ்வாறு வனஜீவராசிகள் யானை வேலிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கல்முனையில் சூளுரைத்தார்.

அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் சனிக்கிழமை (25) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் பே.இராஜகுலேந்திரன், பொதுஜன பெரமுன அமைப்பாளர்களான எஸ்.சாந்தலிங்கம் சிறிபால ஆகியோர் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில், இந்த நாட்டில் யுத்தத்தை உருவாக்கி பல்லாயிரக்காணக்கான தமிழ் மக்களையும் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களையும் கொன்று குவித்தவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியினர். இப்படிப்பட்டவர்களுக்கே குறிப்பாக ரணில், சஜித் போன்றோருக்கு தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பது வியப்பாகவுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் எமக்கு எதிராக தேர்தலில் நின்று வெற்றிபெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக ஹாரீஸ், பைஸால் ஹாசீம், முஷரப் போன்றவர்கள் இன்று எம்மோடு இணைந்து தலா 1000 இலட்சம் ரூபாய் நிதியைப்பெற்று அவர்களின் பகுதிகளை அபிவிருத்தி செய்கின்றனர். ஆனால் தேசியப் பட்டியல் மூலம் எம்.பியாகிய கலையரசன் பச்சைத் தண்ணிக்குக்கூட வக்கற்ற நிலையில் வெற்றுப் பாத்திரத்தை கையில் ஏந்தி வீறாப்பாக பேசுவது மற்றுமொரு வேடிக்கையாகும்.

யார் எதனை செய்தாலும் எமது அரசாங்கம் இந்த நாட்டில் வியத்தகு அபிவிருத்திகளை செய்திருக்கின்றது. மாறாக வாய்ப்பேச்சால் மக்களை ஏமாற்றவில்லை. கொவிட் சூழ்நிலைக்கு மத்தியிலும் எமது அரசாங்கம் நிதி நெருக்கடிகளை சந்தித்த வேளையிலும் மக்களுக்கான நிவாரண உதவி, உட்கட்டுமான வசதிகள், அபிவிருத்தி வேலைகள், சமூர்த்தி நிவாரணம், கொரோனா தடுப்பூசி ஏற்றல், பாடசாலைக்கு கடமைக்கு செல்லமுடியாமல் வீட்டில் இருந்தாலும் சம்மளம் வழங்குதல் என ஏகப்பட்ட பணிகளை செய்கின்றனர் என்றார்.

துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராஜா