சவால்களுக்கு மத்தியிலேயே ஆளுநர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கின்றேன்

அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு

நாட்டில் பொருளாதார நிலைமைகளால் ஏற்பட்டுள்ள பாரிய சவால்களுக்கு மத்தியில் தான் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளேன் என்று இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் என்னை மீண்டும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தனர். அவர்கள் என் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையை கருத்திற் கொண்டு எவ்விதமான தயக்கங்களும் இன்றி அப்பதவியை ஏற்றுக்கொள்வதாக கூறினேன்.

இந்த நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் புதன்கிழமை ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்க முடியும் என்று எதிர்பார்க்கின்றேன். அதேநேரம், அப்பதவியில் எனது செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன். மேலும் தற்போது பொருளாதார ரீதியாக நாடு பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது.

இவ்விதமானதொரு தருணத்தில் தான் ஆளுநர் பதவியை நான் பொறுப்பேற்கின்றேன். சவால்கள் நிறைந்த காலத்தில் இப்பதவியைப் பெற்றுக்கொண்டு மீண்டும் நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வருவதையே இலக்காக கொண்டுள்ளேன்.