ஆணின் உரிமை மீறல்களை விடவும் பெண்ணின் மீதான உரிமை அழிப்புகள் அவதானிக்கப்படுகின்றன

ஆண் இந்த சமூகத்தை விரிந்த கண்வழி அணுகவும், பெண் ஆரம்பத்தில் கண்கள் கட்டப்பட்டும் இன்றைய பலத்த போராட்டத்தின் வழியில் கண்கள் திறந்தும் பயணிக்கின்றாள்...

கடந்த காலங்களில் நாம் இலக்கியங்களிலிருந்து சமூகத்தில் உருவாக்கப்படும் பல்வேறுபட்ட படைப்புக்களும் பெண் என்பவள் எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளாள் என்பதனை விரிவாக கண்டுவந்தோம். அதன்வழி நான் அநேகமாக சந்தித்த கேள்வி அப்படியென்றால் ஆண்கள் நல்லவர்கள் இல்லையா? ஆண்களுக்கு உரிமை இல்லையா? அவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படுவதில்லையா? இந்த கேள்விகளும் வந்தவண்ணமே உள்ளன.

பார்வையற்றவர் இருவரை சமமாக மதிக்கலாம். கண்பார்வை உள்ள இருவரில் ஒருவரை கண்ணைக் கட்டிக்கொண்டு நடக்கச் சொல்வது தவறு. ஆண் இந்த சமூகத்தை விரிந்த கண்வழி அணுகவும் ,பெண் ஆரம்பத்தில் கண்கள் கட்டப்பட்டும் இன்றைய பலத்த போராட்டத்தின் வழியில் கண்கள் திறந்தும் பயணிக்கின்றாள். ஆனால் அவர் பார்வை மட்டுப்படுத்தப்படுகின்றது. இதுவே இரண்டு தரப்புக்கும் உள்ள வேறுபாடு.அதனால் தான் ஆணின் உரிமை மீறல்களைவிடவும் பெண்ணின் மீதான உரிமை அழிப்புக்கள் அவதானிக்கப்படுகின்றன.

ஆனால் இந்த உலகத்தில் பெண்களை மதிக்கும் அவளுக்குரிய உரிமையை அவளிடமிருந்து தட்டிப்பறிக்காத ஆண்களும் உள்ளனர். அவர்களைத்தான் நாம் உருவாக்க வேண்டும். ஏற்கனவே சொல்லப்படுவதுபோல பெண்களை பாதுகாப்பாய் இருக்க கற்றுக்கொடுப்பதை விட பெண்ணிடம் ஆண் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என இனிவரும் தலைமுறைக்கேனும் நாம் எடுத்து இயம்ப மறந்துவிடகூடாது.

ஆரம்பத்தில் நமது சமூகம் தாய்வழிச்சமூக மரபாகவே இருந்ததை நாம் அறிவோம். அது பின்னர் தந்தைவழி சமூகமாக உருவெடுத்தது. அதாவது ஆநிரைகளை மேய்கவும் காவல் காக்கவும், போரிட்டு ஆநிரைகளை கொண்டுவருதலும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அக்காலத்தில் ஆநிரைகள் செல்வத்தின் அடையாளமாக அமைந்தது.

ஒருகட்டத்தில் அவ்வாறு கொண்டுவருபவற்றை தமக்கெனவும் இன்னாருக்கு இன்னார்க்கு என வெற்றி கொண்டவன் தீர்மானித்தான். அவ்வாறு செல்வத்தை பெருக்கியவன் ஊர் தலைவனாக படிபடியாக உயர்வாக மிதிக்கப்பட பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்.

‘களர்ப்படு கூவற்றோண்டி நாளும்

புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை

தாதெருமறுகின் மாசுண விருந்து

பலர் குறை செய்த மலர் தாரண்ணல்’ -

ஒளவையாரின் புறநானூற்று செய்யுளின்படி தலைவனின் அழுக்குப்படிந்த ஆடைகளை துவைக்கும் நிலையிலேயே அவள் வைக்கப்பட்டாள்.

இப்படி கால நகர்வுகளில் பலதரப்பட்ட அடிமைப்பாட்டுக்குள் சிக்கியிருந்த பெண் மீளத்தொடங்கியதும் பாரதி, பெரியார் போன்ற ஆண்களின் உதவியும் இருந்தது என்பது நாம் மறந்துவிடலாகாது.

பெண் விடுதலை குறித்து பாரதியார் எழுதிய கவிதைகள் பெண்ணியக் கருத்துக்களை அறிவதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

“அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம்”

என்று சாடுவதோடு நின்றுவிடவில்லை பாரதி

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’

இந்த சூளுரைகள் எல்லாம் பெண்ணானவள் தன்னிலையை திரும்பிப்பார்க்க வைத்தன .பெண் இந்த உலகில் எத்தனை வகையான பாகங்களை கொள்கின்றாளோ அதேயளவு ஆணும் கொள்கிறான். மகன்,நண்பன்,காதலன்,கணவன், தந்தை, பாட்டன் என விரிந்து செல்லும்

அவன் உலகும் அழகானது.

நமது பாரம்பரிய சமூக கட்டமைப்பில் நாம் ஒன்றை வகுத்திருக்கின்றோம். அது ஆண் என்றால் அழவே கூடாது. மென்மை குணம் கொண்டவர்களையும், அழும் ஆண்களையும் கோழை என்றே சொல்லி வருகிறோம். இது எப்படி சாத்தியமாகும். மனிதர்களிடத்தில் அத்தனை விதமான மனோநிலைகளும் உண்டு. சோகத்தில் அழ ஆணால் முடிவதில்லை என்பது அர்த்தமற்றது. அவன் திடமானவன் என்பதனைகாட்ட அவ்வாறு வகுத்து அவனது மென்மையான மனவளர்ச்சியை உடைத்து கடினப்படுத்திவிட்டோம்.

ஆனால் அவன் உடைந்து அழுவான் எப்போது தெரியுமா? தனக்குமட்டுமேயான அன்பை அள்ளிக்கொடுக்கும் பெண்ணிடத்தல் நொருங்கி அழுவான்.

ஆண்களின் உழைப்பாலும் பாதுகாப்பு முயற்சிகளாலும் அவன் காப்பது அவனது குடும்ப கட்டமைப்பு. தனக்காக மட்டுமன்றி தனது குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் உழைப்பான். இந்த நிலையில் அவனை சுயநலம் மிக்கவனாக நம்மால் மதிப்பிட முடியாது. இன்றுவரையில் தனது வாழ்க்கை துணையின் அல்லது மகளின் வளர்ச்சியில் ஊன்றுகோலாயும் ஏணியாயும் இருக்கும் ஆண்களை நாம் காணலாம். எப்படி ஆண் சமூகத்தின் உரிமை மீறல்கள் வெளித்தெரியாமல் போகின்றனவோ அதேபோலவே அவர்களது தியாகங்களும் வெளித்தெரிவதில்லை. இத்தோடு முடிந்துவிடாது நாம் தொடர்ந்தும் அவர்களைப்பற்றி பேசவேண்டும்.

சாதனை செய்தவர் ஒருவரே மற்றவர் தோற்றவர் என்பதற்காக அந்த ஒற்றை சாதனையாளனை நாம் மறந்துவிடகூடாது என்பதற்காகவேனும் நாம் தொடந்தும் துளிரில் பயணிப்போம்.

பவதாரணி ராஜசிங்கம்


Add new comment

Or log in with...