முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நூருல் அமீன் பணியிலிருந்து ஓய்வு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் சுமார் 34 வருடங்களாக சேவையாற்றிய உதவிப் பணிப்பாளரான மௌலவி நூருல் அமீன் தனது 60 ஆவது வயதில் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். நூருல் அமீனை நான் முதலில் நன்கு அறிந்து கொண்டது 2018ம் ஆண்டு ஹஜ் காலப் பகுதியில் மூன்று வாரங்கள் பதில் பணிப்பாளராக கடமையாற்றிய போதாகும்.

அந்த மூன்று வாரங்களில் சுமார் 7 கருத்திட்டப் பிரேரணைகளை வரைந்து வக்பு சபைக்கு சமர்ப்பிப்பதில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது எனலாம். கடமையில் கருத்தான ஒருவராக அந்த மூன்று வாரங்களுள் நான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன். திணைக்களத்தின் கலை கலாசாரப் பிரிவை ஆரம்பித்த போது அதன் உதவிப் பணிப்பாளராக நூருல் அமீன் தெரிவு செய்யப்பட்டார்.

1961 ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த நூருல் அமீன் 2021 ஜூன் மாதம் 20 ம் திகதி தனது 60 வயது பூர்த்தியோடு அரச சேவைக்கு பிரியாவிடை வழங்கினார். அவர் 1987 மார்ச் 09 ஆம் திகதி கலாசார உத்தியோகத்தராக (தரம் III) முதன் முதலில் திணைக்களத்திற்கு நியமனம் பெற்றார். பின்னர் 1992 முதல் 1996 வரை வக்பு சபையின் உதவி செயலாளராக பணியாற்றிய பின், 1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை விசாரணை அதிகாரியாக (Investigating Officer) திணைக்களத்திலே தொடர்ந்தும் சேவை புரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு முதல் தரம்-I கலாசார உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பின்னர் 2010 ஆம் ஆண்டில் உதவிப் பணிப்பாளராக தனது சேவையை திணைக்களத்தில் ஆரம்பித்து, 2016- 2020 வரை வக்ப் பிரிவின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக (Authorized Officer) நூருல் அமீன் பணியாற்றியுள்ளார்.

இறுதியாக, திணைக்களத்தின் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றான கலை மற்றும் கலாசார பிரிவு என்னால் ஆரம்பிக்கப்பட்ட போது, அப்பிரிவின் பொறுப்பதிகாரியாக நூருல் அமீன் நியமிக்கப்பட்டார். அப்பிரிவினூடாக, திணைக்களத்தின் வரலாற்றில் முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்ட பல முக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான திட்டங்களை நான் முன்வைத்தபோது அவற்றை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நடத்தினார்.

திணைக்களத்தின் ஆரம்ப காலம் முதல் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் அவர். அஹதிய்யா பாடத்திட்ட நூல்களை தொகுத்தல், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சைகளை நடத்துவதற்கு பாடத் திட்டங்களை தயாரித்ததுடன் அப்பரீட்சைகளை நடாத்துவதற்கான நிதி ஒதிக்கீட்டினை வருடாந்த வரவு செலவுப் பட்டியலில் (Budget) ஒதுக்கீடு செய்வதற்கு முன்னோடியாக இருந்தார். வருடாந்த ஹஜ் பயணங்களை ஏற்பாடு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்தார். இலங்கையிலுள்ள வக்ப் சொத்துக்கள் மற்றும் பள்ளிவாயல்கள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தியமை என இவரது பல சேவைகளை பொதுவாகக் கூறலாம்.

2006 ஆம் ஆண்டு அஹதியா பாடசாலைகளில் இறுதிச் சான்றிதழ் பரீட்சை ஒன்றை நடத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட போது அதில் இவரது பங்களிப்பும் அதில் காணப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் தீனிய்யாத் மற்றும் தர்மாச்சார்ய போன்ற பாடங்களுக்கான பாடத்திட்ட நூல்களை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதில் இவரது முயற்சியும் காணப்பட்டுள்ளது.

பொறுமை, சகிப்புத் தன்மை, பிறருக்கு உதவும் மனப்பாங்கு, பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைத்தல், நீதியாக நடந்து கொள்ளுதல், பிறர் நலனில் அக்கறை கொள்ளுதல் போன்ற பல முக்கியமான நற்பண்புகளை தன்னகத்தே வைத்திருந்த இவர் 1985 ஆம் ஆண்டு மூதுர் நத்வதுல் உலமா அறபுக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்கையை மக்கள் நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் அர்ப்பணித்த ஒருவர் அவர்.

ஏ.பி.எம்.அஷ்ரப்
பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்


Add new comment

Or log in with...