இரண்டாவது டோஸ் செலுத்த 230,000 தடுப்பூசிகள் கைவசம்

- செலுத்தும் திகதியை நிபுணத்துவ குழு தீர்மானிக்கும்

இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்காக இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் (230,000) அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது கைவசம் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்கும் தினத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட பேச்சுவார்த்தை ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கிணங்க முதற்கட்ட தடுப்பூசி வழங்கியவர்களுக்கே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு 10 அல்லது 12 வாரங்களுக்குள் இரண்டாம்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும். அதற்காக 2 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. நிபுணத்துவ குழுவின் பேச்சு வார்த்தையின் பின்னர் அதற்கான திகதி அறிவிக்கப்படும்.

தற்போது உலகளவில் நிலவும் நடைமுறைகளுக்கு இணங்க பத்து வாரத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதா அல்லது 12 வாரத்தில் வழங்குவதா என்பது தொடர்பான தீர்மானம் எமது நிபுணத்துவ குழுவினால் மேற்கொள்ளப்படும்.

எமக்குத் தேவையான மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் நாட்டுக்கு கிடைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார், (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...