நிஜங்களைப் பேசியிருக்கும் நிருத்திகனின் 'உனக்கு மரணமில்லை' கவிதைத்தொகுப்பு

காலம் தன்னுடைய ஓட்டத்தில் ஒவ்வொரு ஆளுகைகளையும் நமக்குக் காட்டிக் கொண்டே செல்லும். இந்தச் சாமந்தர ஓட்டத்தில் கலைத்துறை சார்ந்து பலரும் தம்மை உருவாக்கியும், தாமாக உருவாகியும் முகிழ்கின்றமை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம்.

ஆனால், ஒரு மிகத் துயரமான சம்பவிப்போடு நடக்கும் சில சம்பவங்கள் நம்மை கதி கலங்க செய்வதுண்டு. அண்மிய நாட்களாக கவிதைத் துறை சார்ந்து சமூகவலைத் தளங்கள் வாயிலாக நன்கு அறியப்பட்ட வடமராச்சி மண்ணைச் சேர்ந்த சு. நிருத்திகன் மிகக் கூடுதலான கவிதைகளை நாளும் பொழுதும் எழுதிக் கொண்டு பல வெற்றிச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டிருந்தவர்.

எதிர்காலத்தில் தான் கவிதைத் தொகுதியியொன்றை வெளியிட வேண்டும் என்ற விருப்பில் இயங்கிக் கொண்டிருந்த கவிஞர் நிருத்திகன் கடந்த பெப்ரவரி ஏழாம் திகதி சடுதியான மரணத்தைச் சந்தித்தமை இற்றை வரை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மிகப் பாரிய துயரை தந்திருக்கின்றது. இந்தத் துயரின் கனம் மிக ஆழமானது இன்னும் பலர் அதிலிருந்து விடுபடமுடியாத சூழலில் அமரர். சு. நிருத்திகனின் 31ம் நாள் நிறைவில் அவரின் விருப்பு அவரில்லா நிலையில் நிறைவேறியிருக்கிறது.

தனது கவிதைத் தொகுதிக்காக அவர் யாத்த பல கவிதைகளை சேகரித்து மிகக் காத்திரமான ஒரு பணியை செய்து வெளியீடு செய்திருக்கின்றது ஜீவநதி பதிப்பகம். உண்மையிலும் ஜீவநதி பிரதம ஆசிரியர் க. பரணீதரனின் முயற்சியினால் உருப்பெற்ற 'உனக்கு மரணமில்லை' என்ற சு. நிருத்திகனின் கவிதைத் தொகுதி இன்று எம் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த அற்புதமான பணியை எந்தவிதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல், ஒரு கவிஞனின் ஏக்கத்தை அவரில்லா வெளியில் செய்து தந்திருக்கும் ஜீவநதி பதிப்பகத்தின் பணி மிகச் சிறப்பான ஒன்றாகும்.

நிருத்திகனால் எழுதப்பட்ட 200கவிதைகளை உள்ளிருத்தி அழகிய அட்டையையும் தாங்கி வந்திருக்கின்றது. இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அனைத்தையும் படிக்கின்ற போது நிருத்திகன் ஒரு சமூக இசைவாக்கம் கொண்டு இன, மத, மொழி, கடந்த ஒரு மனித நேயச் செயற்பாட்டாளராய் தனது வாழ்வியலை அமைத்துக் கொண்டார் என்பதை அறிய முடிகின்றது. உண்மையில் பல கவிதைகள் அவரது சமூகச் சிந்தனையைக் காட்டி நிற்பதைக் காணமுடிகிறது.

இயற்கை மீதும், தேசம் மீதும், மக்கள் மீதும் மிகுந்த பற்றுள்ளவராக அவர் வாழ்ந்திருக்கின்றார் என்பது புலனாகிறது. மிகச் சிறிய கவிதைகளாக பெரும்பாலான கவிதைகளை யாத்துள்ள இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள 'வல்லமை தாராயோ' கவிதையில்

'வஞ்சகம் நிறைந்தவனை உலகினிலே
நெஞ்சங்கள் யாவும் நேர்மைகள் இன்றி
மதநூல்கள் மீதிலே மகுடங்கள் சூடி
வந்திடும் கயவரை வகையாய் வெல்ல
முந்திடும் முதல்வா வல்லமை தாராயோ'  என்ற கவிதை மிக அருமையாக உள்ளதைக் காணலாம்.

தொடர்ந்து 'சிற்பி' எனும் கவிதையில்

'வெற்றுக் கல்லாக இருந்த என்னை
உற்று நோக்கி கண்ட அவனே
செதுக்கி நின்றான் சிற்பியாக உளியினாலே
கையில் பட்ட பின்னர் நானே
பட்டை தீட்டிய வைரம் ஆனேன்'

இப்படியான பல வித்தியாசமான கவிதைகளை மிக அழகாக யாத்திருக்கின்றார். காதலைக் கவிதையாக யாத்திருக்கும் இவரது பாணி உண்மையில் ரசனை பூர்வமாக அமைந்திருக்கின்றது.

ஒவ்வொரு கவிதையிலும் வித்தியாசமான சிந்தனைகளை தத்ரூபமாகப் பதிவு செய்திருக்கின்றார்.

வட பகுதியில் வாழ்ந்து கொண்டே மலையக மக்களின் பாடுகளையும் பல கவிதைகளின் ஊடாக எழுதியிருப்பதன் வாயிலாக அவருடைய விரல்கள் கடந்த பார்வை உண்மையில் பிரமிக்க வைக்கின்றது.

'உனக்கு மரணமில்லை' என்ற தொகுதியின் தலைப்பே நிருத்திகன் என்ற கவிஞன் மறைந்தாலும் இந்தப் படைப்பின் ஊடாக அவர் இலக்கிய வெளியில் வாழப்போகின்றார் என்பதை கட்டியம் கூறி நிற்கிறது.

ஓர் இக்கட்டான சூழலில் வெளியாகி இருந்தாலும் ஓர் ஆளுமை மிகு மனிதனின் உள்ளே ஒளிந்திருந்த திறமைகளின் வெளிப்பாட்டிற்கு சாட்சியாக ஈந்தத் தொகுதி அமையும் என்பது வெளிப்படை. எதிர்கால கனவுகள் பலதையும் தனது கவிதைகள் பலவற்றினூடாக வெளிப்படுத்தியிருக்கும் நிருத்திகனது கவிதைகள் உண்மையில் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியதென்பதை ஆணித்தரமாக கூறலாம்.

நூலின் அணிந்துரையை ஜீவநதி பிரதம ஆசிரியர் க. பரணீதரனும், பின்னட்டைக் குறிப்பை கலாநிதி கலாமணி அவர்களும், நிருத்திகனை முன்னீடாக நிறுத்திய செல்லக்குட்டி கணேசனின் கவிதையும் உள்ளிடங்கலாக வெளியாகி இருக்கும் இந்தத் தொகுதியை உருவாக்க உழைத்த அத்தனை பேரும் பாராட்டத்தக்கவர்களே.

 


Add new comment

Or log in with...