சொந்த மண்ணில் மே.தீவுகளை வீழ்த்துமா இலங்கை?

- நாளை அதிகாலை 3.30 மணிக்கு போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

ஆண்டிகுவா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு) இப்போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில், இலங்கை அணிக்கு அஞ்சலோ மத்தியூசும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கீரன் பொலார்ட்டும் தலைமை தாங்கவுள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 11 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். இதில் ஆறு முறை இலங்கை அணியும் ஐந்து முறை மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றிபெற்றுள்ளன.

கெயில் கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் விளையாடியதற்கு பின்னர், தேசிய அணியில் இணைக்கப்படவில்லை. இந்தநிலையில் கெயில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் முதன்முறையாக குழாத்தில் இடம்பிடித்துள்ளதுடன், பிடெல் எட்வர்ட்ஸ் சுமார் 9 வருடங்களுக்கு பின்னர் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

பிடெல் எட்வர்ட்ஸ் இறுதியாக 2012ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்ததுடன், இவரது இறுதி ரி 20 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 2012ம் ஆண்டு விளையாடியிருந்தார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக கிறிஸ் கெயில், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரின் இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருந்த நிலையில், நாடு திரும்பியிருந்தார்.

இவர்களுடன் புதுமுக வீரரான கெவின் சின்கிலையர் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் குழாத்தில் இடம்பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகியிருந்த அகீல் ஹுசைன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி 20குழாம்களில் இடம்பிடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகல துறை வீரர் அன்ரே ரசல் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமாகிவரும் நிலையில், அவருக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர் ஒருநாள் மற்றும் ரி 20 குழாம்களில் இடத்தை தக்கவைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராக கீரன் பொல்லார்ட் செயற்படவுள்ளதுடன், நிக்கோலஸ் பூரன், எவின் லிவிஸ் மற்றும் பெபியன் எலன் ஆகியோர் ஒருநாள் மற்றும் ரி 20 குழாம்களில் இடம்பிடித்துள்ளனர். டுவைன் ப்ராவோ இலங்கை அணிக்கு எதிரான ரி20 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், ஷிம்ரன் ஹெட்மையர், ஒசானே தோமஸ், ஷெல்டன் கொட்ரல் மற்றும் ரொஸ்டன் சேஸ் ஆகியோர் உடற்தகுதியை நிரூபிக்க தவறியதால், குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைவராக அஞ்சலோ மத்தியுஸ் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாடவிருக்கின்றது.

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை ரி 20 அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட தசுன் ஷானக்கவிற்கு, அவரின் கடவுச்சீட்டு பிரச்சினையினால் மேற்கிந்திய தீவுகள் செல்வதற்கான அமெரிக்க வீசாவினை பெற முடியாமல் போயிருந்தது. இதனால், தசுன் ஷானக்க இன்னும் மேற்கிந்திய தீவுகள் பயணமாகவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றிலேயே, இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ரி 20 தொடரில் இலங்கை அணியினை வழிநடாத்தும் பொறுப்பு அஞ்சலோ மத்தியுஸுக்கு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வீசா சிக்கலால் மே.தீவுகள் பயணிக்க தவறிய தசுன் ஷானக!

அதேநேரம், தசுன் ஷானக்க தனது வீசா பிரச்சினையினை நிவர்த்தி செய்த பின்னர், மேற்கிந்திய தீவுகள் சென்றிருக்கும் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மே.தீவுகள் 20க்கு 20 அணி

கீரன் பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன், பெபியன் எலன், டுவைன் ப்ராவோ, பிடெல் எட்வர்ட்ஸ், அன்ரே ப்ளெச்சர், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், எவின் லிவிஸ், ஒபெட் மெக்கோய், ரோவ்மன் பவல், லெண்ட்ல் சிம்மொன்ஸ், கெவின் சின்கிலையர்.

இந்தப் போட்டியின் முடிவு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Add new comment

Or log in with...