பாகிஸ்தான் அரசியலில் வெற்றிகரமான வீரர்

இம்ரான் கான் வருகையினால் வலுவடையும் இருதரப்பு நல்லுறவு

1970 களில் இருந்து இரண்டு தசாப்தங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இம்ரான் கான் ஒரு சிறந்த வீரராக திகழ்ந்தவர். அவர் தனது ஆளுமை மற்றும் சமூகத் தொண்டுகள் மூலம் உலகம் முழுவதும் நற்பெயரையும் வளர்த்துக் கொண்டவர்.

இம்ரான் கான், 1992 இல் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வெல்ல காரணமானவர். இவர் தன் மீது இருந்த மக்கள் ஆதரவை தேர்தல் வெற்றியாக மாற்ற பல ஆண்டுகளாக போராடினார். மேலும் இவர், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சியை 1996 இல் ஆரம்பித்தார். இறுதியாக, 22 வருட அரசியல் போராட்டத்திற்குப் பிறகு இவரது கட்சி 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து பாகிஸ்தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கான இம்ரான்கானின் பொருளாதாரப் பார்வை விசேஷமானது. ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த இம்ரான்கான் கடுமையாக உழைத்து வருகிறார். 2018 பொதுத் தேர்தலில் ‘புதிய பாகிஸ்தான்’ ஒன்று உருவாக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். சீரான கல்வி முறை, சுகாதாரத் திட்டம், ஊழல் ஒழிப்பு, வரி அறவீட்டு முறையை மேம்படுத்துதல், பாகிஸ்தானின் சுய-நிலைத்தன்மை, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கூட்டமைப்பை வலுப்படுத்துதல், பொலிஸ் துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வருதல், முதலீட்டை உயர்த்துதல், சுற்றுலா, விவசாயத் துறையை வலுப்படுத்துதல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதாக இம்ரான்கான் உறுதியளித்தார். மேலும், அவர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் பாதையில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார்.

மேலும், பிரதமர் இம்ரான்கான் கொவிட்19 தொற்று நோயினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சிறந்த உத்திகளைக் கையாண்டு கட்டுப்படுத்தி வெற்றி கொண்டார். 2020 ஆம் ஆண்டானது உலகளவில், சவால்கள் நிறைந்த ஆண்டாக கூறப்பட்டாலும், பாகிஸ்தானைப் பொறுத்த வரை பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது கூட ‘வெற்றி மற்றும் வளர்ச்சியின்’ பாதையில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டானது, பாகிஸ்தானைப் பொறுத்த வரை நிலையான பொருளாதாரம், அபிவிருத்தி, நலத் திட்டங்கள் மற்றும் முன்னணி வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை ஈட்டியது..

பிரதமர் இம்ரான்கான் உள்நாட்டில் மட்டுமல்லாமல், உலகத்தின் முன்னேற்றத்திற்காகவும் போராடக் கூடியவர். இவர், ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது அமர்வில் உரையாற்றியதில் காலநிலை மாற்றம், ஊழல், தொற்றுநோய் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளை எடுத்துரைத்தார். இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் ஐ.நா தனது பங்கை சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இம்ரான் கான் இயல்பான தலைமைத்துவமும் திறனும் உள்ள ஒரு பரோபகார சமூகத் தொண்டர். அவர் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும், குறிப்பாக வணிக மற்றும் நிதி முகாமைத்துவ அம்சங்களில் நீண்ட தூரநோக்கு இலக்குடையவர். வர்த்தகம், நிதி, ரியல் எஸ்டேட், சட்டம், அறிவியல், வெளியீடு மற்றும் பாரியளவிலான நிறுவனங்களின் முகாமைத்துவம் ஆகியவை இம்ரான் கானுக்கு மிகவும் பொருத்தமான தொழில் துறைகளாகும். அவர் இயல்பாகவே செல்வாக்கு மற்றும் தலைமை பதவிகளில் ஈர்ப்பு மிக்கவர். அரசியல், சமூகப் பணி மற்றும் கற்பித்தல் ஆகியவை அவரது திறமைகளில் ஒரு சிலவாகும். பிரதமர் இம்ரான் கானின் இருபத்திரண்டு ஆண்டு கால அரசியல் போராட்டத்தை ஒரு விறுவிறுப்பான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் ஒப்பிடலாம். இது பல பல திசைகள் மற்றும் திருப்பங்களைக் கொண்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் வெளிநாட்டு விவகார அரங்கிலும் சிறப்பாக செயல்பட முடிந்தது. சர்வதேச அரங்கில் இம்ரான்கானின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் நாட்டின் அனைத்து நிறுவனங்களுடனும் நெருக்கமான ஒருங்கிணைப்பே இதற்கு காரணமாகும்.

1990 களில், இம்ரான் கான் யுனிசெப்பின் விளையாட்டுக்கான சிறப்பு பிரதிநிதியாகவும் பணியாற்றினார். பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்தில் சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு திட்டங்களை ஊக்குவித்தார். லண்டனில் இருந்த போது, கிரிக்கெட் தொண்டு நிறுவனத்துடனும் பணியாற்றினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசியலில் இணைவதற்கு முன்பு சமூகப் பணிகளில் ஈடுபட்டார்.

1990களின் முற்பகுதியில், அவர் தனது தாயார் திருமதி ஷாவ்கத் கானூமின் பெயரைக் கொண்ட ஒரு தொண்டு நிறுவனமான ஷவ்கத் கானமின் நினைவு அறக்கட்டளையை நிறுவினார். அறக்கட்டளையின் முதல் முயற்சியாக, பாகிஸ்தானின் முதல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார். இது உலகம் முழுவதிலுமிருந்து இம்ரான்கான் திரட்டிய 25 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.

இம்ரான் கான் மியான்வாலி மாவட்டத்தில் 2018 ஏப்ரல் மாதத்தில் நமல் கல்லூரி என்று அழைக்கப்படும் தொழில்நுட்பக் கல்லூரியையும் நிறுவினார். இது பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணை கல்லூரி ஆகும்.

இம்ரான் கான் அறக்கட்டளை மற்றொரு நலன்புரிப் பணியாகும், இது பாகிஸ்தான் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. மேலும் , இது பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்துள்ளது.

இம்ரான் கான் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதோடு இலங்கையில் பெரும் ரசிகர்களையும் கொண்டுள்ளார். பிரதமர் இம்ரான்கானின் இலங்கை விஜயமானது இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதாகவும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு பயனுள்ளதாகவும் அமைவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். இவ்விஜயமானது, இரு நட்பு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.

கட்டுரை உதவி: அஷ்ரப் ஏ சமத்


Add new comment

Or log in with...