பொத்துவில் - பொலிகண்டி போராட்ட வழக்கு விசாரணைகள் பருத்தித்துறை, முல்லைத்தீவு நீதிமன்றங்களால் ஒத்திவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிமன்ற கட்டளைக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக பொலிசாரால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேசங்களை சேர்ந்த பொலிசார் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள். முல்லைத்தீவுப் பொலிசாரால் நேற்று AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய அறிக்கையிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில மக்கள் பிரதிநிதிகள் சிலரின் பெயரும் மதத்தலைவர்களின் பெயரும் உள்ளடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ் வழக்கின் மீதான விசாரணையினை எதிர்வரும் 17.06.2021 திகதியிட்டு மன்று உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறை நீதிமன்றிலும் பொலிசார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு எதிராகவே இந்த அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அறிக்கை மீதான விசாரணைகள் நேற்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றதை அடுத்து பருத்தித்துறை பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு பொலிஸ் நிலையங்களின் வழக்குகளும் மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு விசேட, யாழ்.விசேட நிருபர்கள்


Add new comment

Or log in with...