பேரணியை தடுக்கவே வீதிகளில் ஆணிகள்

- சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு
- பொத்துவில் - பொலிகண்டி போராட்டம்; நேற்று வடக்கு நோக்கி நகர தொடங்கியது

எமது பேரணியினை தடுக்கவே வீதிகளில் ஆணிகள் வைக்கப்பட்டன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியின் மூன்றாவது நாள் நேற்று திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரணி பயணிக்கும் வீதிகளில் ஆணிகள் எறியப்பட்டு, பேரணியில் பங்கேற்ற வாகனங்களின் டயர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக சிவில் சமூக பிரதிநிதிகள் பயணித்த வாகனம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பயணித்த வாகனம், மேலும் சில வாகனங்களின் டயர்களே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பேரணி வரும் வீதிகளில் ஆணிகளை வைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை தடுத்து நிறுத்தும் மிக மோசமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதனை யார் செய்தார்களோ தெரியாது. நாங்கள் உங்களை அடிக்க வரவில்லை. குழப்பம் செய்ய வரவில்லை. நியாயம் கேட்டே செல்கிறோம் என்றார்.

பொத்துவில் - பொலிகண்டி போராட்டம்; நேற்று வடக்கு நோக்கி நகர தொடங்கியது

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நேற்று 03 வது நாளாக திருகோணமலை சிவன் கோவிலடியில் இருந்து ஆரம்பமானது.

காலை 8.00 மணிக்கு கோயிலில் விசேட பூசை நடைபெற்று இப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இருந்து இரண்டாவது நாளாக ஆரம்பமான இந்த பேரணி வெருகல், கிண்ணியா ஊடாக இரவு திருகோணமலையை வந்தடைத்தது.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீகம் அபகரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணமல் ஆக்கப்பட்டோர் விடயம், மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றை கண்டித்தே இக் கண்டனப் பேரணி நடைபெற்று வருகின்றது.

திருகோணமலை பிரதான வீதியின் ஊடாக பேரணி, நடைபவனி நிலாவெளி ஊடாக தென்னமரவாடியை சென்றடைந்து, வடக்கு நோக்கி பயணிக்க இருக்கின்றது. இந்த மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார், ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், க.துரைரெட்ணசிங்கம் நகராட்சி, மற்றும் பிரதேசபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் தலைவர்கள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர், அன்புவழிபுரம் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...