மன்னார் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களில்100 தொற்றாளர்கள்

- மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

மன்னார் மாவட்டத்தில் கடந்த  20நாட்ளில் மாத்திரம் 100கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் நேற்று  வியாழக்கிழமை(21) ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

மாவட்டத்தில் இந்த மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை 117கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று முந்தினம்   புதன் கிழமை கிடைக்கப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை அறிக்கையின்படி மன்னார் மாவட்டத்தில் 30கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே பொது மக்கள், வியாபார நிலையங்களின் உரிமையாளர்களிடம் நாங்கள் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.

பொது மக்கள் தேவையற்ற விடயங்களுக்கு நகர பகுதிகளுக்குள் வருவதையும், தேவையற்ற விதத்தில் வியாபார நிலையங்களில் ஒன்று கூடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக சுகாதார நடைமுறைகளை பின் பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், இடைவெளியை பேணுதல் மற்றும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை கடை பிடிக்க வேண்டும்.

எதிர் வரும் 2முதல் 4வாரங்களுக்கு மக்கள் குறித்த விடயங்களை பின்பற்றினால் குறித்த தொற்றி  அடைவை குறைத்து தொற்றுச் சங்கிலியை உடைக்க முடியும்.

எனவே நோயின் தீவிரத்தன்மையை அனைவரும் புரிந்து கொண்டு மிகவும் பொறுப்பு உணர்வுடன் நடந்து கொண்டால் குறித்த நோயின் தாக்கத்தை எம்மால் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

மன்னார் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...