சீனி இறக்குமதியில் எவ்வித ஊழலும் இடம்பெறவில்லை | தினகரன்

சீனி இறக்குமதியில் எவ்வித ஊழலும் இடம்பெறவில்லை

- பாராளுமன்றில் அரசாங்கம் அறிவிப்பு

சீனி இறக்குமதியில் 10பில்லியன் ஊழல் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் தர்க்கத்தில் ஈடுபட்ட போதிலும் சீனி இறக்குமதியில் எவ்வித ஊழலும் இடம்பெறவில்லையென அரசாங்கம் பதிலளித்தது.  

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் 10மணிக்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள்சமர்ப்பணம், கேள்வி நேரத்தின் பின்னர் எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த விசேட கூற்று தொடர்பில் எழுந்த சர்ச்சையின் போதே அரசாங்கத்தின் சார்பில் சீனி இறக்குமதியில் ஊழல் இடபெறவில்லையென தெரிவிக்கப்பட்டது.  

எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த விசேட கூற்றில், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானங்களின் 5ஆவது பிரிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அந்த பிரிவுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென கோரிக்கைவிடுத்தேன்.  

ஆனால், எனது கருத்தை செவிமடுக்காது சபைத் தலைவரின் கருத்தை மாத்திரம் செவிமடுத்து அந்த பிரிவு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இது நாம் பின்பற்றும் பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானதாகும். எதிர்கட்சிகளால் கோரிக்கைவிடுக்கப்பட்டால் அதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதே சம்பிரதாயம் என்றார்.  

இதன்போது எழுந்த சபைத் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஸ் குணவர்தன, இப் பிரிவு நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்த முடியாது. 5ஆவது பிரிவு நிறைவேற்றப்பட்ட பின்னரே நீங்கள் வாக்கெடுப்பை கோரினீர்கள். என்றாலும் 6ஆவது பிரிவுக்கு வாக்கெடுப்பு நடத்துமாறு நாங்கள் கோரியிருந்தோம். அதற்கு நீங்கள் இணக்கம் வெளியிட்டிருக்கவில்லை என்றார்.  

இந்த விடயத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சீனி இறக்குமதியில் 10பில்லியன் ஊழல் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்குத் தேவையான கொவிட்19தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நாம் 10பில்லியன் கடனை உலகில் கோருகிறோம். ஊழல் செய்யப்பட்ட நிதி இருந்தால் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள எவரிடமும் கடன் கோர வேண்டியதில்லை. சீனி இறக்குமதியில் ஊழல இடம்பெற்றிருந்ததால் ஐக்கிய மக்கள் சக்தியின் குழுக் கூட்டத்திலேயே இந்த பிரிவுக்கு எதிர்ப்பை வெளியிட முடிவுசெய்துவிட்டோம். ஆகவே, ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நடந்துக்கொள்ள வேண்டும். ஹென்சார்ட்டில் இந்த விடயத்திற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக பதியுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார். இதன்போது குறுக்கிட்ட சமிந்த விஜேசிறி, வாக்கெடுப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து சபாநாயகர் நடந்துக்கொள்ள வேண்டும் என்றார். சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ‘சரி’ என சபாநாயகர் பதிலளித்தார்.  

இதன்போது எழுந்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண,   சீனி இறக்குமதியில் எங்கும் ஊழல் இடம்பெறவில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். ஆகவே, எந்த வகையிலும் ஊழல் இடம்பெறில்லையெனவும் உரிய தரவுகளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதாக பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...