தென் ஆபிரிக்கா மண்ணில் இலங்கை அணி தடுமாற்றம்

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஜெகனர்ஸ்பேர்க் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆரம்ப வீரர் குசல் பெரேரா தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்தி 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

குசல் பெரேராவை விட லஹிரு திரிமான்ன மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். 16 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் அணியில் இடம்பெற்ற திரிமான்ன 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அணித் தலைவர் திமுத் கருணாரட்ன (2), குசல் மெண்டிஸ் (0), அறிமுக வீரர் மினோத் பானுக்க (5) ஆகியோர் துடுப்பாட்டத்தில் தாக்குப் பிடிக்கவில்லை.

இடைவேளையின்போது நிரோஷன் திக்வெல்ல 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த வனிந்து ஹசரங்க 29 ஓட்டங்களை பெற்றதே இலங்கை அணி சார்பாக பெற்ற கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும்.

பந்துவீச்சில் வியான் முல்டர் 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 7 ஓவர்கள் பந்துவீசி ஓர் ஓட்டத்தை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அன்ரிச் நோர்ட்யா 56 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார்.லூத்தோ சிபம்லா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

2-வது போட்டிக்கான தென்ஆபிரிக்க அணியில், ரபடா ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படவில்லை.

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளர் ரபடா இடம் பெறவில்லை.

2-வது போட்டியில் விளையாட அணியில் சேர்க்கப்பட்டார். நேற்று 2-வது போட்டி தொடங்கியது. தென்ஆபிரிக்க ஆடும் லெவன் அணியில் ரபடா சேர்க்கப்படவில்லை. இது அனைவரும் ஆச்சரியத்தை கொடுத்தது. ஆனால், அடுத்து அவுஸ்திரேலியா தொடக்கு சிறப்பான வகையில் உடற்தகுதி பெறுவதற்காகவே அணியில் சேர்க்கப்படவில்லை என்று அணியின் தலைவர் குயிண்டாசன் டி கொக் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது துரதிர்ஷ்டவசமாக வீரர்கள் உபாதைக்குள்ளானதால் இன்னிங்ஸால் தோல்வி அடைய நேரிட்ட இலங்கை அணி, 2 ஆவது டெஸ்ட் போட்டியை நான்கு மாற்றங்களுடன் எதிர்கொள்கின்றது.

இதில் இரண்டு அறிமுக வீரர்களான துடுப்பாட்ட வீரர் மினோத் பானுக்கவும் வேகப்பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோவும் இடம்பெற்றனர்.

உபாதைக்குள்ளான துடுப்பாட்ட வீரர்களான தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால் ஆகியோருக்குப் பதிலாக லஹிரு திரிமான்ன, அறிமுக வீரர் மினோத் பானுக்க ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகியோருக்குப் பதிலாக துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் வனிந்து ஹசரங்க பூரண குணமடைந்து அணியில் இடம்பெற்றார்.

இலங்கை அணி: திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் பெரேரா, லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், மினோத் பானுக்க, தசுன் ஷானக்க, நிரோஷன் திக்வெல்ல, வனிந்து ஹசரங், துஷ்மன்த சமீர, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ.

தென் ஆபிரிக்க அணி: டீன் எல்கர், ஏய்டன் மார்க்ராம், ரசி வென் டேர் டுசென், பவ் டு ப்ளெசிஸ், குவின்டன் டி கொக் (தலைவர்), டெம்பா பவுமா, வியான் முமல்டர், கேஷவ் மஹராஜ், அன்ரிச் நோர்ட்யா, லுங்கி நிகிடி, லூத்தோ சிபம்லா. பத்திரிகை அச்சுக்கு போகும் வரையான தகவலே இவை.

 


Add new comment

Or log in with...