ஐ.தே.கவுக்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதற்குத் திட்டம் | தினகரன்

ஐ.தே.கவுக்கு புதிய இரத்தம் பாய்ச்சுவதற்குத் திட்டம்

பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டு வருவதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன கூறுகிறார். அதேநேரம் வெவ்வேறு கட்சிகளின் கொள்கைகள் முரண்பட்டுக் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன அண்மையில் எமக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: -ஐக்கிய தேசியக் கட்சி அண்மைக் காலத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியது. குறிப்பாக அதன் ஒரு பகுதி பிரிந்து சென்று வேறொரு தனிக் கட்சி அமைத்தது. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி முன்பு இருந்ததை விட பலமாக மீண்டெழும் என்று ஊடகவியலாளர் மாநாடொன்றில் நீங்கள் கூறியிருந்தீர்கள்? இதன் மூலம் எதனைக் கூற நினைக்கிறீர்கள்?

பதில்: -ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புது இரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய முகங்களை அழைத்து வர இது நல்ல தருணம் என நான் நினைக்கிறேன். மக்களுக்கு அரசியல்வாதிகளைப் பிடிக்காமல் போயுள்ள காலம் இப்போது வந்திருக்கிறது. புதிய தலைவர்களின் வருகையை மக்கள் இப்போது எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் கட்சிக்குள் புதியவர்களை கொண்டு வந்து கட்சிக்கு புதிய இரத்தத்தை செலுத்தி கட்சிக்கு புதிய அடையாளமொன்றை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு இப்போது கட்சிக்கு கிடைத்துள்ளது. அதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நல்ல பெறுபேறுகளை ஐக்கிய தேசிய கட்சியினால் பெற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி: நீங்கள் சொல்லும் புது முகங்களை எங்கே இருந்து தேடுகிறீர்கள்?

பதில்: -கட்சியின் அடிமட்ட அமைப்புகளை மீண்டும் செயற்படுத்தும் நோக்கத்துடன் நான் கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாவட்டங்களுக்கும் சென்று வருகிறேன். நாம் அந்த இடங்களுக்கு செல்லும்போது அரசியலில் நுழையும் ஆர்வத்துடன் உள்ள பலரைக் காண்கிறோம். இதனால் அடுத்த சில மாதங்களில் நேர்மையாக முறையாக செயற்படக் கூடிய சிலரை கட்சிக்குள் கொண்டு வர முடியுமென நான் நினைக்கிறேன். அவ்வாறான ஒரு இடத்திலிருந்து நாம் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி: இதில் நீங்கள் என்ன பங்கு வகிக்கிறீர்கள்?

பதில்: -கட்சியை மறுசீரமைக்கும் வகையில் எனக்கு பிரதித் தலைவருக்கான பணிகள் தரப்பட்டுள்ளன. மாவட்ட ரீதியில் கட்சி ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துதல், அவர்களின் யோசனைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுதல், அதன்படி கட்சியின் தேசிய திட்டத்தை வகுத்தல், அதன் மூலம் கட்சியின் முன்னேற்றப் பாதையை திட்டமிடுவதுடன் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்தல் போன்ற விடயங்கள் எனது பங்களிப்பில் இடம்பெறவுள்ளன.

கேள்வி: கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: -நான் காட்டும் பெறுபேறுகளைப் பொறுத்தே அது அமையும் என்று நினைக்கிறேன். நான் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளதாக எனது கட்சியில் உள்ள பெரும்பாலானோர் கருதி என் மீது நம்பிக்கை வைப்பார்களேயானால், அவ்வாறான ஒரு மாற்றம் வரும் போது அதனை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கப்பட்டால் நான் அதனை ஏற்றுக் கொள்வேன்.

கேள்வி: 2021 ஜனவரியில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கிறார். தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு அவரது பங்களிப்பு எவ்வாறு அமையும்?

பதில்: -அவரிடம் இருந்து நிறைய விடயங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் பொருளாதாரம் மற்றும் பல்வேறு ஏனைய விடயங்கள் தொடர்பாக அவருக்கு உள்ள அறிவு எத்தகையது என்பதை இந்த நாட்டில் உள்ள பலருக்கு இன்னும் தெரியாதுள்ளது. அவர் ஆலோசகர் என்ற ரீதியிலாவது எம்மிடையே இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதன் மூலம் நாடு மிகுந்த பயனைப் பெறும். அடுத்த விடயம் நாட்டின் பொருளாதார விடயங்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பதாகும். இந்த நாட்டின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பது பெருமளவு அரசியல்வாதிகளுக்கு தெரியாது. ஆனால் அந்த அறிவு ரணில் விக்கிரமசிங்கவிடம் உள்ளது.கொவிட்19 காரணமாக முழு உலகமும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு நாடும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளன. பொருளாதார ரீதியில் இலங்கை போன்ற ஒரு நாட்டை இன்னொரு நாடு மீட்டெடுக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஒரு சில மேற்கு நாடுகளை மட்டுமே நாம் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

கேள்வி: 2021ஆம் வருடத்துக்கான உங்கள் திட்டம் என்ன?

பதில்: - பொருளாதாரம்தான் சிக்கலான விடயமாக இருக்கப் போகிறது. நாடு பணம் இல்லாத நிலையில் உள்ளது. இந்த அரசாங்கத்துக்கு இந்த வருட ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு இப்போது இல்லை. 2021 இல் ஐக்கிய தேசியக் கட்சி மீளமைக்கப்படவுள்ளது. அதன் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு பலம் மிகுந்த ஒரு எதிர்க்கட்சியாக நாம் மாறப் போகிறோம்.

கேள்வி: அப்படியானால் 2021 இல் நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: -ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பலர் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் எம்முடன் இணைந்து செயற்பட்டவர்கள்தான். எமக்கு இப்போது ஒரு ஜனாதிபதி இருக்கிறார். 20 இன் மூலம் அவரது கையில் நிறைய அதிகாரங்கள் உள்ளன. அதேநேரம் இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை உள்ளது. இந்த நிலையில் அதனை எதிர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மட்டுமல்ல, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மற்றைய எதிர்க் கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும். இது பற்றி நாம் இப்போது கலந்துரையாடி வருகிறோம். எந்தவொரு கட்சியினாலும் அதனை தனியாக செய்ய முடியாது. பரந்துபட்ட அரசியல் கூட்டணியால்தான் அது முடியும். அவ்வாறான ஒரு பரந்துபட்ட கூட்டணியாக தேர்தலுக்குச் செல்வதுதான் நல்லது. ஆனால் அவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தாலும் பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். கூட்டணியில் உள்ள வெவ்வேறு கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் அபிப்பிராயங்கள் இருக்கும். இதனால் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும். எனவே முறையான தேசிய திட்டம் பற்றி உட்கார்ந்து பேசினால்தான் நல்ல முடிவை எட்டலாம்.

ஆன்யா விபுலசேன
(தமிழில் என். ராமலிங்கம்)


Add new comment

Or log in with...