பாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு | தினகரன்

பாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு

பாராளுமன்ற நடவடிக்கை ஒரு நாளுடன் மட்டுப்பாடு-Parliamentary proceedings will be limited to one day in next week

- ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றுவதில் கட்டுப்பாடு

கொவிட் 19 நிலை காரணமாக, அடுத்தவாரம் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (29) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், 2020 நிதியாண்டின் சேவை செலவுக்கு ஏற்பாடு செய்வதற்கு நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஓதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இன்று (29) தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நவம்பர் 03 முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், அன்றையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அத்துடன், அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படாது.

அதேநேரம், பாராளுமன்றம் கூடும் தினத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தவிர வேறு எவரும் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்காதிருக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊடகப் பிரதிநிதிகளும் பாராளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கு பாராளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அளகப்பெரும, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, ரஊப் ஹக்கீம், டிலான் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதிச் செயலாளர் நாயகமும், பணிக்குழு பிரதானியுமான நீல் இத்தவல ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

கொவிட் நிலை தொடர்பில், பாராளுமன்ற அமர்வை அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள்

PDF File: 

Add new comment

Or log in with...