ஒப்சேர்வர்- மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீர, வீராங்கனை விருது விழா நவம்பரில்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒப்சேர்வர்- – மொபிடெல் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீர, வீராங்கனை விருது வழங்கல் விழாவை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிந்தவுடனேயே பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

விருது பெறும் வீர, வீராங்கனைகள் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டனர். இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கம் மற்றும் கிரிக்கெட் நடுவர்கள் சங்கம் ஆகியவை தேசிய தெரிவுக் குழுவின் தலைவர் அசந்த டி. மெல்லின் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் விருது பெறும் வீரர்களை தெரிவு செய்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1982ல் நடைபெற்றது. அப்போட்டியில் இலங்கைக்கான முதல் பந்து வீச்சு ஓவரை ஆரம்பித்து வைத்ததுடன் அப்போட்டியில் இங்கிலாந்தின் ஜெப் குக்கின் விக்கெட்டை கைப்பற்றிய பெருமைக்குரியவரான அசந்த டி.மெல் இம்முறை ஒப்சேர்வர்- மொபிடெல் விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்வது பொருத்தமானதாகும். இத்தனைக்கும் ஒப்சேர்வர் முதலாவது சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கல் விழா நடைபெற்ற நான்கு வருடங்கஎளின் பின்னரே இலங்கை அணி அதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாடியிருந்தது குறிப்பிடத்தகக்கது.

அசந்த லக்தாச பிரான்ஸிஸ் டி மெல் அவரது ஆரம்ப கல்வியை கொழும்பு இசிபத்தன கல்லூரியில் படித்தார். அதன்பின் கொழும்பு ரோயல் கல்லுரிக்கு மாறினார். 1983 உலகக் கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்ற போது அசந்த டி மெல் இரண்டு போட்டிகளில் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தானுக்கு எதிராக ஹெடிங்லி மைதானத்தில் நடந்த போட்டியில் அசந்த டி மெல் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்ததாக டேர்பியல் நியுசிலாந்து எதிராக நடைபெற்ற போட்டியில் அசந்த டி மெல் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்போட்டியில் இலங்கை மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

1983 உலகக் கிண்ண சுற்றுப் போட்டியில் அசந்த டி மெல் 2வது அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராகத் திகழ்ந்தார். இவர் அத்தொடரில் 17 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். இந்தியாவின் ரொஜர் பினியே அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பெருமையைப் பெற்றார். 1987இல் முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அசந்த டி மெல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக வேண்டியதாயிற்று.

கடந்த வெள்ளிக்கிழமை விருது பெறும் வீர, வீராங்கனைகளை தெரிவு செய்யும் பாடசாலைகள் கிரிக்கெட் சங்க குழுவுக்கு அச்சங்கத்தின் தலைவரும் நாலாந்தா வித்தியாலயத்தின் அதிபர் திலக் வாத்துஹேவா தலைமை தாங்கினார். அத்துடன் கிரிக்கெட் நடுவர்கள் பலரும் Batsman.lk இணையத்தள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கொழும்பு நவரங்கஹலவில் 1979 இல் முதல் முறையாக நடந்த ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கல் விழா அங்கிருந்து கொழும்பு ஹில்டன் ஹோட்டல், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், கலதாரி ஹோட்டல் ஆகிய இடங்களுக்கு சென்று இப்பொழுது மீண்டும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வந்துள்ளது.

அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கொவிட் 19 நோய்த் தொற்றுக்கான ஒழுங்கு விதிகளின்படி அதிக அளவிலான பார்வையாளர்கள் அமரக்கூடிய மண்டபமாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் இருப்பதனாலேயே விருது வழங்கல் விழாவுக்கு அது தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை விருது வழங்கல் விழாவுக்கு ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் அனுசரணை வழங்குகிறது. அதேநேரம் 2020 ஆம் வருடத்தில் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கும் ஒரே விழாவாக இது அமைகின்றது.

ஒப்சேர்வர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கல் விழா இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தரும் ஒரு களமாக உள்ளது. இலங்கை தேசிய அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் தமது பாடசாலைக்காலத்தில் இந்த விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசோசியேட்டட் நியூஸ் பேபர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் (லேக் ஹவுஸ்) ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விருது வழங்கல் விழா ஸ்ரீலங்கா டெலிகொம்- – மொபிமெல் நிறுவனம் தொடர்ந்து 13ஆம் தடவையாக அனுசரணை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா டெலிகொமினதும் மொபிடெல்லினதும் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ மற்றும் மேற்படி நிறுவனங்களின் பிரதான நிறைவெற்று அதிகாரி நளின் பெரேரா ஆகியோர் இந்த விருது வழங்கல் நிகழ்வில் நிதி உதவியை வழங்கியுள்ளனர்.

அதேவேளை லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான டபிள்யூ. தயாரத்ன, ஆசிரிய பீடப் பணிப்பாளர் தர்மஸ்ரீ காரியவசம், சட்டம் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் ரக்கித்த அபேகுணவர்தன, நிதிப் பணிப்பாளர் ஜனக ரணதுங்க, செயற்பாட்டு பணிப்பாளர் கனிஷ்க வித்தாரன ஆகியோர் இந்த விழா தொடர்ந்து முன்னேற்றம் காண உதவியுள்ளனர்.


Add new comment

Or log in with...