ஐரோப்பாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் தொற்று

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுபோக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், உத்தேச நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்கப்பட்டுவருவது குறித்தும் அந்த அமைப்பு கவலை தெரிவித்தது.

இந்த மாதம் ஐரோப்பாவில் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நோய்ப்பரவல் சம்பவங்கள் உலக மக்கள் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பணிப்பாளர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்படி நோய்த்தொற்று உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் பிரான்ஸில் அது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் அயர்லந்திலும் அது இப்போது 10 நாட்களாக உள்ளது. இன்னும் சில நாடுகள் அதேபோன்று தனிமைப்படுத்தப்படும் நாட்களைக் குறைக்கத் திட்டமிடுகின்றன.

தனிமைப்படுத்தும் நாட்களைக் குறைத்தால், சர்வதேச பயணத்துக்கு அனுமதி வழங்குவது எளிதாகும் என்பது அவற்றின் நம்பிக்கை. தற்போதைய நிலவரப்படி ஐரோப்பாவில் கொவிட்-19 நோயால் சுமார் 5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளன்ர். 227,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஐரோப்பாவில் சராசரியாக நாளொன்றுக்கு 40,000 இல் இருந்து 50,000 பேர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

வைரஸ் தொற்றுக்கான மருத்துவச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டதால் புதிதாக அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.


Add new comment

Or log in with...