இந்தியாவில் கொரோனா மறுதொற்று குறித்து கவலை வேண்டாம்

மத்திய அரசு தகவல்

இந்தியாவில் கொரோனா மறுதொற்று என்பது மிக மிக அரிதானது எனவும் அது குறித்து கவலை வேண்டாம் என இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் தெரிவித்தார்.  

கொரோனா தொற்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியபோதும், இந்தியாவில் அது உச்சத்தை எட்ட முடியவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. 

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆய்வுக்கவுன்சில் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா கூறுகையில், ‘கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, நீங்கள் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளை பார்த்தால், அங்கெல்லாம் கொரோனா உச்சம் தொட்டு, பின்னர் குறைந்தது. அதுவும் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையில் மரணங்கள் நிகழ்ந்தன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நாடுகளின் அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்றோம்’ என்று கூறினார். 

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அமல்படுத்திய மிக தீவிர ஊரடங்கால் அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடிந்ததாக கூறிய பார்கவா, அதனால் உண்மையில் நாம் கொரோனாவின் மிகப்பெரிய உச்சத்தை அனுபவிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மறுதொற்று என்பது மிக மிக அரிதானது எனக்கூறிய அவர், இது குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.  இதைப்போல, இந்தியா 38.50 இலட்சத்துக்கு மேற்பட்ட குணமடைந்தவர்களை கொண்டிருப்பதாக கூறியுள்ள சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், இது உலக அளவில் அதிகமானதாகும் எனவும் தெரிவித்தார்.   


Add new comment

Or log in with...