பஸ், ரயில் கட்டணங்களை அதிகரிக்காமல் மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவோம்

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே

கேள்வி: புதிய அரசில் உங்களுக்கு கிடைத்த அமைச்சு தொடர்பில் என்ன எண்ணுகிறீர்கள்?

பதில்: எனக்கு அளிக்கப்பட்டுள்ள போக்குவரத்து அமைச்சு குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அத்தோடு இளைஞரான இராஜாங்க அமைச்சர் ஒருவரும் எனக்கு வழங்கப்பட்டுள்ளார். நாம் தற்போது எமது பணிகளை ஆரம்பிக்க தயாராகி வருகின்றோம்.

நாம் தேர்தலில் மக்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கோரினோம்.அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்கவும் கொரோனா தொற்றுக் காரணமாக பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீளக்கட்டி எழுப்பவுமாகும். அத்துடன் ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைப்போம் என்றும் கூறியிருந்தோம். மக்கள் அனைத்தையும் அங்கீகரித்துள்ளார்கள். நாம் தற்போது 'சுபீட்சத்தின் நோக்கு' திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

கேள்வி: போக்குவரத்துத்துறை சவால் மிக்கதாகும். அச்சவாலை வெற்றிக் கொள்ள உங்களின் எதிர்கால திட்டங்கள்,.....

பதில்: தற்போது எமது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். ஏனென்றால் எமது மக்களின் 90 வீதமானோர் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். நாம் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகளையும் ரயில் சேவைகளையும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

கேள்வி: அமைச்சரவை அமைக்கப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன. திட்டங்களை தயாரிக்க இன்னும் காலம் எடுக்குமா?

பதில்: அதிகாரம் உள்ளதென்று பொது மக்களின் பணத்தை வீணடித்து கணகாட்சி காட்ட நாம் தயாரில்லை. எம்மிடமுள்ள வளத்தை பயன்படுத்தி எமது நிறுவனங்களை மேம்படுத்துவதோடு மக்களுக்கு திருப்தியான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டுமானால் அந்த நிறுவனங்களை ஒவ்வொன்றாக ஆராய வேண்டும். நாம் கொழும்பு மாவட்டத்தில் சிசு செரிய பஸ் போக்குவரத்தை பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கவுள்ளோம். கொழும்பில் மாத்திரம் 200 'சிசு செரிய' பஸ்கள் உள்ளன. கொழும்பில் அதனை ஆரம்பித்து பின்னர் அச் சேவையை நாடு பூராவும் விஸ்தரிக்கவுள்ளோம்.

கேள்வி: நீங்கள் கூறுவதை பார்த்தால் பஸ் மற்றும் புகையிரத சேவைகள் நட்டத்தில் இயங்குவதாகவே தெரிகின்றது. அதனால் பஸ், ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா?

பதில்: இல்லை. இவ்வேளையில் நாம் ஒரு போதும் பஸ், ரயில் கட்டணங்களை அதிகரிக்க மாட்டோம். இந் நிறுவனங்களை நட்டத்தில் இருந்து மீட்க புதிய திட்டங்களை செயல் படுத்தவுள்ளோம். புகையிரதங்களை பயன்படுத்தி பொருட்களை கொண்டு செல்வது போன்ற நடவடிக்கையை நாம் பஸ் வண்டிகளிலும் மேற்கொள்ளவுள்ளோம். பஸ் வண்டிகளில் பின்பக்க ஆசனங்களை அகற்றி அவ்விடங்களில் கிராமங்களில் இருந்து விவசாய பொருட்களை ஏற்றி இறக்க தீர்மானித்துள்ளோம்.

கேள்வி: அன்று எதிர்க்கட்சியில் இருந்த போது நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் மோசடி பற்றி பேசினீர்கள். போக்குவரத்து அமைச்சின் மீது நீங்கள் குற்றம் சாட்டினீர்கள். அன்று நீங்கள் தெரிவித்த ஊழல் மோசடி குறித்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: ஆம், நாம் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அத்தகவல்களை FCIDக்கு கையளிக்கமாட்டோம் . அதற்குரிய பொலிசாரிடம் கையளித்து குற்றம் செய்தவர்களுக்கு எதிராக சட்டத்தை செயல்படுத்துமாறு கூறுவோம்.

கேள்வி: கோட்டை புகையிரத நிலையத்தில் நீங்கள் மேற்கொள்ள உள்ள மாற்றங்கள் என்ன?

பதில்: ரயில் நிலையத்தில் ரயில் வரும் வரை பயணிகள் காத்திருக்கின்றார்கள். அதன் பின்னர் அதில் பயணம் செய்து தங்கள் கிராமத்தில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்கின்றார்கள். அதனால் நாம் அனைத்து அரச நிறுவனங்களும் செயல்படுத்தும் விற்பனை நிலையங்களை திறந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை மலிவு விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைகள் உள்ளது போல ரயில் நிலையத்தில் அவ்வாறான கடைகளை திறக்கவுள்ளோம். நல்ல உணவகங்களையும் அமைப்பதோடு மலசலகூட வசதிகளையும் மேம்படுத்த உள்ளோம்.

கேள்வி: நீங்கள் தொழிற்சங்க தலைவராக, அமைச்சுப் பதவி மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?.

பதில்: நாம் எமது அரசின் கொள்கையாக தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கு விசேட கவனம் செலுத்துவோம். கோரிக்கைகள் நியாயமானது என்றால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னரே அவற்றை வழங்குவோம்.அதன் மூலம் எமக்கு எமது அமைச்சின் தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களிடமிருந்தும் நல்ல ஒத்துழைப்பும் சக்தியும் இவ்வமைச்சை நடத்துவதற்கு கிடைத்துள்ளது.

கேள்வி: பஸ் மற்றும் ரயில்கள் குறித்த கால அட்டவணையின் படி இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து?

பதில்: நாம் ஆரம்பத்தில் கூறியவாறு மிகக்குறைந்த வளத்தைக் கொண்டே இந்த சேவையை வழங்குகிறோம்.அதனால் இன்னும் சில காலம் பழைய நிலைமையே இருக்கக்கூடும். எவ்வாறாயினும் நாம் புகையிரத பொது முகாமையாளருக்கும் இ.போ. ச தலைவருக்கும் கால அட்டவணைப்படி போக்குவரத்து சேவைகளை நடத்துமாறு கூறியுள்ளோம். அதேபோல் செயலியொன்றை யும் உருவாக்கி கால அட்டவணையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கேள்வி: நீங்களும் இராஜாங்க அமைச்சர், அதிகாரிகள் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலில் பஸ்ஸை கழுவும் இடத்தில் இருந்து ஆரம்பியுங்கள் என்று கூறினார். அதன் மூலம் போக்குவரத்து அமைச்சை ஆரம்பத்திலிருந்தே மீள அமைக்க வேண்டுவேண்டுமென்ற கருத்தில்தானே கூறினார்?

பதில்: ஜனாதிபதி கூறியது போன்று விசேடமாக பஸ் ஒன்று தனது பயணத்தை பூர்த்தி செய்த பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் போது பஸ்ஸின் உள்ளேயும் வெளியேயும் துப்புரவு செய்யுமாறு அறிவித்துள்ளோம். போக்குவரத்து ஆணைக்குழுவினூடாகவும் தனியார்துறை பஸ் வண்டி உரிமையாளரிடமும் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளோம். அதேபோன்று மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி செயல்படுத்தவுள்ளோம்.

கேள்வி: மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு எவ்வாறு தயாராகிறீர்கள்.....

பதில்: மாகாண சபைத் தேர்தலுக்கு கட்டாயம் முகம் கொடுக்க வேண்டும். எமது நாட்டின் தேர்தல் சரித்திரத்தையே மாற்றிய பொதுத் தேர்தலைப் போன்று மாகாண சபைத் தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவோம். செய்யும் வேலையை சரியாக செய்தால் நாம் தேர்தலைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியமில்லை.

ஜயசூரிய உடுகும்புற...?
தமிழில்: வீ.ஆர். வயலட்


Add new comment

Or log in with...