ஏழு மாதங்களில் 23 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பரவல்

கடந்த வருடத்தைவிட 50 வீத வீழ்ச்சி 

நாட்டில் கடந்த ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.  

இது வரையில் ஒன்பது மாகாணங்களிலும் 23, 885 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை சுமார் 10 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் இது வரையில் 3,380 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பிற்கு அடுத்ததாக மட்டக்களப்பில் 2,262 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 2,260 பேரும் , கண்டியில் 2,181 பேரும் , கம்பஹாவில் 2,029 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 

இதே போன்று யாழில் 1,959 பேரும், இரத்தினபுரியில் 1,456 பேரும் , களுத்துறையில் 1,430 பேரும், காலியில் 1,111 பேரும் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளனர். இவற்றை தவிர ஏனைய மாவட்டங்களில் ஆயிரத்திற்கு குறைவான நோயாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கல்முனையில் 861 , குருணாகலில் 772 , கேகாலை 600, மாத்தளை 499, பதுளை 419, புத்தளம் 411 என்ற அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...