மறையுண்மையை மையப்படுத்தி கொண்டாடப்படும் கத்தோலிக்க திருவிழாக்கள்

வழிபாட்டு ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் விழாக்களில் பெரும்பாலானவை இயேசுவின் வாழ்விலோ புனிதர்களின் வாழ்விலோ நிகழ்ந்தவற்றின் நினைவுகளாக அமைந்துள்ளன.

இயேசுவின் பிறப்பு, திருமுழுக்கு, உரு மாற்றம், உயிர்ப்பு, விண்ணேற்றம் என அவரது வாழ்வின் பல நிகழ்வுகளை நாம் விழாக்களாக கொண்டாடுகிறோம்.

ஒரு சில விழாக்கள்மட்டுமே ஒரு கருத்தை அல்லது ஒரு மறையுண்மையை மையப்படுத்தி அமைந்துள்ளன. அவற்றில் கடந்த 14ம் திகதி  ஞாயிறு நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடினோம்.

அதேவேளை, கடந்த ஞாயிறு கிறிஸ்துவின் பரிசுத்தஉடல் மற்றும் இரத்தம் என்ற மறையுண்மையை விழாவாகக் கொண்டாடினோம்.

இவ்விரு விழாக்களும் கத்தோலிக்கத் திருச்சபையின் மிக முக்கியமான மறையுண்மைகள்.

இவ்விரு மறையுண்மைகளுக்கும் 'தூய்மைமிகு' என்ற அடைமொழியை வழங்கியுள்ளோம்.

திருஅவையின் வரலாற்றை திருப்பிப்பார்த்தால் இவ்விரு 'தூய்மைமிகு' மறையுண்மைகளும் 'விவாதங்கள் மிகுந்த'மறையுண்மைகளாக விளங்கின என்பதை உணரலாம்.

பல நூற்றாண்டுகளாக இவ்விரு மறையுண்மைகளையொட்டி கேள்விகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.

மூவொரு கடவுள் என்ற மறையுண்மையை தன் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த புனித அகுஸ்தினாரைகேள்விப்பட்டுள்ளோம்.

நம் கடவுள் 'எப்படி' மூன்று ஆட்களாய் அதே நேரம் ஒரே கடவுளாய் இருக்கமுடியும் என்ற கேள்வி புனித அகுஸ்தினாரையும் இன்னும் பல இறையியல் மேதைகளையும் ஆட்கொண்டது.

இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் எழுந்தன.  கடற்கரையில் குழந்தை வடிவில் வானதூதரைச் சந்தித்த அனுபவம் புனித அகுஸ்தினாரை அறிவிலும் பணிவிலும் வளர்த்தது. எனவே அவர் "அன்பைக் காணமுடிந்தால் மூவொரு கடவுளையும் காணமுடியும்" என்ற அற்புதக் கூற்றை பல தலைமுறைகளுக்கு பாடமாக விட்டுச்சென்றார்.  நாம் கொண்டாடும் கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்தம் என்ற மறையுண்மையில் அப்ப, இரச வடிவில் கிறிஸ்து எப்படி பிரசன்னமாகியிருக்க முடியும் என்ற கேள்வி பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. 'எப்படி' என்ற கேள்வி நற்செய்தியிலும் ஒலிக்கிறது.

(யோவான் 6:51-52)

இயேசு யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

 “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.

இவ்வுலகம் வாழும் பொருட்டு தன்னையே ஒரு கொடையாக வழங்கப்போவதாக இயேசு கூறியதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இது எப்படி இயலும் என்ற வாக்குவாதத்தை யூதர்கள் துவக்கினர். அன்று எழுந்த 'எப்படி' என்ற வாக்குவாதம் பல நூற்றாண்டுகளாக திருஅவை வரலாற்றில் பல்வேறு வடிவங்களில்  என்ற கேள்வியாக விவாதமாக வலம்வந்துள்ளது.

கேள்விகளால் மறையுண்மைகளை கூறுபோடும் முயற்சிகளைக் கைவிட்டு அந்த உண்மைக்குமுன் பணிவுடன் மண்டியிட்டு வணங்குவதே மனிதர்களுக்கு நலம் என்பதை புனிதர்கள் நமக்கு உணர்த்திச் சென்றுள்ளனர்.

மறையுண்மைகளை அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சியில் எழுப்பப்படும் 'எப்படி' என்ற கேள்விக்குப் பதில் இந்த மறையுண்மைகள் 'ஏன்' நமக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது மேல் என்பதை புனித அகுஸ்தினார் போன்ற புனிதர்கள் புரிந்துகொண்டனர்.

இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்பதைக் கூறும் இறையியல் விளக்கங்கள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. ‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதிலாக ஏன் நம் இறைமகன் இயேசு அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.

இறைமகன் ஏன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச்சென்றார்? அப்பமும் இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவாக இருந்ததால் அவற்றின் வழியே தன் பிரசன்னத்தை விட்டுச் செல்ல இயேசு விழைந்தார்.         (மிகுதி அடுத்த வாரம்)

ஜெரோம் லூயிஸ்


Add new comment

Or log in with...