வெளிநாட்டிலுள்ள இலங்கையர் கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்துவர அரசு ஏற்பாடு

இதுவரை 5,000 பேர் வருகை

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 5,000 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று முன்தினம் தெரிவித்தார். இதேவேளை 41,000 க்கும் அதிகமான இலங்கையர் நாட்டுக்கு வரக்காத்திருப்பதாகவும் அவர்களை கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் கட்டம் கட்டமாக மக்களை அழைத்து வரும் வரை அனைவரையும் பொறுமையுடன் இருக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது-, வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களின் வேண்டுகோளை கருத்திற் கொண்டு அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மாணவர்களுக்கு முன்னுரிமையென்ற அடிப்படையில் இதுவரை 3,000 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் ஒவ்வொரு புதன்கிழமையும் கூடும் கூட்டத்தில் அழைத்து வரப்படுபவர்களின் பெயர்கள் முன்னுரிமையடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணவர்களுக்கு முப்படையினரின் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு மேலதிகமாக மொறட்டுவை பல்கலைக்கழகம், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நுட்ப பீடம், ஹோமாகம பிட்டிபன தொழில்நுட்ப பீடம், கொடகம தொழில்நுட்பக் கல்லூரி என்பவற்றில் தனிமைப்படுத்த உயர்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...