ஸதகத்துல் பித்ர்

தற்போதைய ரமழான் மாதத்தின் இறுதிக் காலப்பகுதியிலும் ஒவ்வொரு நாளும் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் சில நாட்களில் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையும் தென்படவிருக்கின்றது. அதாவது புனித ரமழான் மாதம் நிறைவுற்று ஷவ்வால் மாதம் ஆரம்பமாகவிருக்கின்றது. ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாள் (ஈதுல் பித்ர்) கொண்டாடப்படும். ஆனால் ரமழான் மாதத்தின் இறுதிக் காலப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஷவ்வால் பிறை தென்பட்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்பட முன்னர் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமை உள்ளது. அதுதான் “ஸதகத்துல் பித்ர்” ஆகும்.

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறைவழிபாடுகளில் ஈடுபடுகின்ற முஸ்லிம்கள் இக்கடமையினை நிறைவேற்ற வேண்டும். அதாவது நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட்ட காலப்பகுதியில் எம்மை அறியாமல் ஏற்பட்ட தவறுகள், பிழைகளுக்குப் பரிகாரமாகவே இந்த கடமை விதியாக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் இஸ்லாத்தின் இறுதித் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு தடவை இவ்வாறு குறிப்பிட்டார்கள். “ஸதகத்துல் பித்ர் (தான தர்மம்) என் சமுதாயத்தின் மீது அவசியமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோன்பின் போது ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், ஏதாவது ஒழுங்கற்ற பேச்சுக்கள் பேசப்பட்டிருந்தால் அது போன்ற குறைபாடுகளைக் களைய இது ஈட்டுத் தொகையாக அமையும். அது ஏழை - எளியோருக்கு உணவு ஏற்பாடு செய்யவும் துணையாக அமையும்” (ஆதாதரம் - அபூதாவூத்)

இதன்படி ஸதகத்துல் பித்ரின்  நோக்கும், இலக்கும் தெளிவாகின்றது. இந்தக் கடமையை குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்காகவும் அந்தக் குடும்பத்தின் தலைவர் நிறைவேற்ற வேண்டும். குறிப்பாகத் தாம் உண்ணும் பிரதான உணவுப் பொருளில் ஆளுக்கு இரண்டரை அல்லது இரண்டே முக்கால் கிலோ என்ற அடிப்படையில் வழங்கி நிறைவேற்றப்பட வேண்டிய கடமை இது. நோன்பாளி நோன்பின் போது விடுகின்ற தவறுகளுக்கு இது பரிகாரமான அமைவதோடு, பெருநாள் தினத்தன்று ஏழை, எளியவர்கள் எவரும் உணவின்றிப் பட்டினியில் இருக்காத நிலையை இது ஏற்படுத்தும். அத்தோடு சமூகத்தில் சகலரும் சந்தோஷமாகப் பெருநாளை அனுஷ்டிக்கவும்  வழிவகுக்கும். எனவே ஸதகத்துல் பித்ர் என்ற இந்தக் கடமையினை உரிய ஒழுங்கில் நிறைவேற்றிடுவோம்.

மர்லின்மரிக்கார்


Add new comment

Or log in with...