தேர்தல் திகதிக்கு எதிரான மனு மே 18, 19 இல்; சட்டமா அதிபர் முன்னிலையாக மறுப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு மே 18, 19 இல்; சட்டமா அதிபர் முன்னிலையாக மறுப்பு-General Election Date Gazette FR-SC Consider May 18-19

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் தாம் முன்னிலையாகும் நிலைப்பாட்டில் இல்லை என சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சட்ட மாஅதிபரின் இணைப்பாளர் நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.

ஜூன் 20 ஆம் திகதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு, அரசியலமைப்பின் விதிமுறைகளை மீறியுள்ளதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல் சட்டத்தரணி சரித குணரத்ன தாக்கல் செய்த மனு உள்ளிட்ட ஏழு மனுக்களையும் பரீசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று முடிவு செய்துள்ளது.

அதற்கமைய குறித்த மனுக்களை மே 18, 19ஆம் திகதிகளான எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பரீசிலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (11) குறித்த விடயம் தொடர்பான மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெனாண்டோ, எஸ். துரைராஜா ஆகிய மூவரடங்கிய குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வாறு முடிவு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் தொடர்பில் இடைத்தரப்பினர்களாக முன்னிலையாக விரும்புவோர் நாளை (12) பிற்பகல் 3.00 மணிக்கு மன்னர் அது தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட சிலர், இம்மனுக்களின் இடைத் தரப்பினர்களாவதற்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இன்று (11) வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இம்மனு மிகவும் அவசரமானதும் முக்கியமானதும் என்பதால் மிக விரைவாக அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று,  சட்டத்தரணி சரித குணரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இம்மனுவை விசாரணை செய்வதற்கான தினத்தை அறிவிக்கும் வரை, இது தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அனைத்து தரப்பினரினதும் காரணங்களை கேட்டபின், உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என, இதன்போது பிரதம நீதியரசர் தலைமையிலான உச்சநீதிமன்ற குழாம் தெரிவித்தது.

தேர்தல் தினம் தொடர்பான மனுக்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு சார்பிலோ அல்லது அதன் உறுப்பினர்கள் சார்பிலோ ஆஜராகும் நிலைப்பாட்டில் தாம் இல்லை என, இதன்போது சட்டமா அதிபர் தனது கருத்தை அறிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...