கொரோனா ஒழிப்பை விட பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதில் மும்முரம்

கொரோனா ஒழிப்பை விட பழைய பாராளுமன்றத்தை கூட்டுவதில் மும்முரம்-Mahinda Rajapaksa Statement on Opposition

- நிதி வழங்கலை நிறுத்தி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் முயற்சி
- அரசியல் பேசுவதை நிறுத்தி இயல்பு வாழ்வை ஏற்படுத்துவதில் கவனம் வேண்டும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளி்ட்ட முழு அரச கட்டமைப்பும் கொரோனாவுக்கு எதிராக முழுமையான கவனம் செலுத்தியிருக்கையில் எதிரணி பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோரி அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். உலகில் அநேக நாடுகளை விட வெற்றிகரமாக கொரோனாவை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகையில் தேர்தல் நடந்தால் எதிரணிக்கு பாதகமான அமையும் என்பதால் அவர்கள் இவ்வாறு நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாவது பழைய பாராளுமன்றத்தை கூட்டவைத்து அரசாங்கத்தின் நிதி வழங்கலை நிறுத்தி கொரோனா ஒழிப்பை குழப்பி பொதுத் தேர்தலுக்குமுன்னர் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதே எதிரணியின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெ ளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும் கலைத்த பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும்

ஏப்ரல் 30 இன் பின்னர் பழைய பாராளுமன்றத்தின் அனுமதியின்றி கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் அடங்கலான அரசின் சேவைகளை முன்னெடுக்க நிதி ஒதுக்க அதிகாரம் கிடையாது என்றும் பழைய பாராளுமன்றத்தை கூட்ட விட்டால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின பிரஜா உரிமை ரத்தாகும் என்றும் சொத்துக்கள் அரசுடமையாகும் என்றும்  அச்சுறுத்தி அரசாங்கத்துடன் எதிரணி சண்டையிட்டு வருகிறது.

ஒரு கொரோனா நோயாளி கூட அடையாளங் காணப்படாத நிலையிலே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. முதலாவது கொரோனா நோயாளி அடையாளங் காணப்பட்ட நிலையில் ஜூன் 20 வரை பொதுத் தேர்தல் ஒத்திவைப்பட்டது.தேர்தல் ஆணைக்குழு தனக்குள்ள அதிகாரத்திற்கமைய இந்த முடிவை எடுத்தது.

பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் வரவு செலவுத் திட்டமொன்று நிறைவேற்றப்படாத நிலையில் அரசியலமைப்பின் 150 (3) சரத்தின் கீழ்  நாட்டின் சேவைகளை முன்னெடுக்க தேவையான பணத்தை பெற ஜனாதிபதிக்கு அதிகாரம்கிடைத்துள்ளது .எனவும் 2020 ஏப்ரல் 30 வரையே குறைநிரப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதன் பின்னர் ஜனாதிபதிக்கு நிதி செலவிட அதிகாரம் இல்லை எனவும் எதிரணி கூறுகிறது.

இந்த வாதத்தை ஏற்க முடியாது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றித்தினூடாக நிதி ஒதுக்கப்படாத எத்தகைய நிலையிலும் நிதி ஒதுக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினூடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தினால் ஒதுக்கிய நிதி இருந்தால் ஜனாதிபதியின் தலையீடு அவசியமில்லை என்பதை புதிதாக கூற தேவையில்லை.

வெளிநாட்டிலிருந்து கிடைத்த உதவிகளை தவறாக பயன்படுத்தியதாலே பழைய பாராளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அஞ்சுவதாக எதிரணி குற்றஞ்சாட்டுகிறது. அரசாங்கத்திற்கு  வெ ளிநாட்டிலிருந்து கிடைக்கும் அனைத்து நிதிகளும் மத்திய வங்கியிலுள்ள பொறிமுறைகளினூடாக திறைசேரிக்கு செல்கிறது.அவற்றை செலவிட அனுமதிக்கப்பட்ட முறைகள் உள்ளன.

புதிய பாராளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர் பழைய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் புதிய பாராளுமன்றம் கூடும் வரையான காலப்பகுதியில் அரசாங்கம் பணம் செலவிட்ட முறை குறித்து கேள்வி எழுப்ப முடியும். தற்போதைய நிலையில் தேர்தல் குறித்தோ அரசியல் குறித்தோ போசுவதை நிறுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்தும் இயல்புவாழ்வை வழமைக்கு கொண்டுவருவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (பா)


Add new comment

Or log in with...