சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கடற்படையின் கட்டுப்பாட்டில்

சுய தனிமைப்படுத்தலை மீறிய 23 பேர் கடற்படையின் கட்டுப்பாட்டில்-Navy Apprehends 23 Person-Behaved in Spite of Self Quarantine

மதுவுக்கு அடிமையான இவர்களை ஒலுவிலுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை

ஜா-எல, சுதுவெல்ல கிராமத்தில் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்ட 23 பேர் அதனை மீறி செயற்பட்டமை தொடர்பில், அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இன்று (20) கடற்படையின் புலனாய்வு பிரவினரின் நடவடிக்கையின் அடிப்படையில் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அண்மையில் ஜா-எல, சுதுவெல்லவில் வசிக்கும் வாடகை வாகன சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த சாரதி, பொலிஸாரின் தலையீட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்த 23 பேரையும், ஜா-எல பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் மூலம், தங்கள் சொந்த வீடுகளில் சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மதுபானத்திற்கு அடிமையான இவர்கள் விதிகளை மீறி அப்பகுதியில் பயணம் செய்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

பாதுகாப்பு படையினரிடமிருந்து தப்பித்துக்கொண்டிருந்த குறித்த குழுவினரைத் தேடி மேற்கு கடற்படை கட்டளையினால் விசேட புலனாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கடற்படையினர் தற்போது ஜா-எலவில் உள்ள அவா மேரி தேவாலயத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலன் கருதி, இவர்களை ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்ட கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு  கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்காக, ஜா-எலவில் உள்ள மருதமடு தேவாலயத்தின் தலைமை பாதிரியார் மற்றும் ஜா-எல பொலிஸ் நிலையம் மற்றும் ஜா-எலவுக்கான மாவட்ட மருத்துவ பிரிவு ஆகியவற்றின் உதவி பெறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...